×

டிக்கெட் வசூல் பணத்தை தாமதமாக அளிப்பு: கண்டக்டர் டிஸ்மிஸ் சரிதான் சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டலத்தில் கடந்த 1984ல் கண்டக்டராக சேர்ந்தவர் சேகர். பஸ்சில் வசூலிக்கும் டிக்கெட் கட்டணத்தை காலதாமதமாக தந்ததாக இவரை கடந்த 2001ல் பணி நீக்கம் செய்து திருவண்ணாமலை மண்டல மேலாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சேகர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வேலூர் முதலாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் சேகரை பணி நீக்கம் செய்தது செல்லாது என்று அறிவித்து அவரை மீண்டும் பணியில் சேர்க்குமாறு 2015ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து போக்குவரத்து கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு அளித்த உத்தரவு வருமாறு: போக்குவரத்து கழகத்தின் உத்தரவை ரத்து செய்ததற்கான காரணத்தை தொழிலாளர் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. தொழிலாளர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் தரப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

 அதே நேரம் இயந்திரத்தனமாக அதிகாரத்தை உபயோகிக்க கூடாது. போக்குவரத்து கழகம் எந்த அடிப்படையில் கண்டக்டர் சேகரை பணி நீக்கம் செய்தது என்பதை ஆய்வு செய்யாமல் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. கண்டக்டர் சேகர் 9 முறை டிக்கெட் வசூல் பணத்தை தாமதமாக தந்துள்ளார். 6 முறை விதிகளுக்கு முரணாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். இதுபோன்ற தவறுகளை 64 முறை செய்துள்ளார். இதற்காக அவருக்கு 9 முறை சாதாரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் தவறு செய்ததை ஆய்வு செய்யாமல் கருணை அடிப்படையில் பணி வழங்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஏற்க கூடியதல்ல. எனவே, சேகரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற வேலூர் தொழிலாளர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கண்டக்டரை பணி நீக்கம் செய்த உத்தரவு சரிதான். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Icort ,Chennai ,recovery ,Madras HC , Tickets, Conductor Dismiss, Madras Icort
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...