ரயில் படிக்கட்டில் பயணிப்பவர்களிடம் குச்சியால் தாக்கி செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

பெரம்பூர்: ரயில் படிக்கட்டில் பயணிப்போரை குறிவைத்து குச்சியால் தாக்கி நூதன முறையில் செல்போன்களை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வேலூர், காகிதப்பட்டறை, எல்.சி.காலனியை சேர்ந்த திலக் விவிலியன் எழிலன் (25) என்பவர், கடந்த 12ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மின்சார ரயிலில் பயணித்தார். அப்போது, படிக்கட்டில் நின்றபடி செல்போனில் படம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.  பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் அருகே சென்றபோது, தண்டவாளம் அருகே நின்றிருந்த மர்ம நபர், திடீரென குச்சியால் தாக்கி, இவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இதேபோல், ஆவடி அண்ணனூரை சேர்ந்த ஜவாத் அக்தர் (25) என்பவர், கடந்த 14ம் தேதி சென்ட்ரலில் இருந்து மின்சார ரயிலில் பயணித்தார். பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் அருகே சென்றபோது, அதேபோல் குச்சியால் தாக்கி செல்போனை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார்.

Advertising
Advertising

கடந்த சில மாதங்களாக பேசின்பாலம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே, சிக்னலுக்காக ரயில்கள் மெதுவாக செல்லும்போது, படியில் பயணிப்பவர்களை குறிவைத்து இதுபோன்று செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதுகுறித்த புகார்களின் பேரில், பெரம்பூர் ரயில் நிலைய ஆய்வாளர் தாமஸ் தலைமையில் ரயில்வே போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேக நபர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், பெரம்பூர், அகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22), பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) என்பதும், இவர்கள் ரயிலில் படிக்கட்டில் நின்றபடி செல்லும் பயணிகளை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும், அந்த செல்போன்களை சென்ட்ரல், மூர்மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.  அவர்களை  கைது செய்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: