தமிழகத்தில் சத்தமின்றி தொடரும் சுகாதார சீர்கேடு உயிர்காக்கும் மருந்துகளே உயிரை கொல்லும் அபாயம்: பின்பற்றப்படாத மருத்துவ கழிவுகள் மேலாண்மை திட்டம்

* மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு கேள்விக்குறி

வேலூர்: தமிழகத்தில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அரசு மருத்துவமனைகளில் சேரும் மருத்துவ கழிவுகளும் மருத்துவமனையின் ஒரு பக்கமாக கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டம் 2008ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் பணிபுரியும் உயர்நிலை அலுவலர்கள் முதல் கடைநிலை பணியாளர்கள் வரை அனைவருக்கும் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை பாதுகாப்புடன் அகற்றி அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 11 தனியார் நிறுவனங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 65 முதல் 75 டன்கள் வரை மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்புடன் அழிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மிக முக்கிய திட்டமான மருத்துவ கழிவுகள் மேலாண்மை திட்டத்தில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சுமார் 40 சதவீதம் மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 150 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து, நாள் ஒன்றுக்கு 1.5 முதல் 2 டன்கள் வரை மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த 2 மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பின்புறத்திலோ, காலி மனைகளிலோ மூட்டை கட்டி வீசுகின்றனர். இதனால் மருத்துவ மேலாண்மை கழிவுகள் திட்டம் அமலுக்கு வந்தபோது ஆரம்பகாலத்தில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடாக தூய்மையான வளாகங்களாக காட்சியளித்தது. ஆனால் தற்போது இத்திட்டம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதே நேரத்தில் மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சிறிய அளவிலான நர்சிங் ஹோம்கள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் போன்றவை இணையாமலே உள்ளன.

மாநிலம் முழுவதுமே 25 முதல் 40 சதவீதம் வரை தனியார் மருத்துவமனைகளே மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இணைந்துள்ளதாக மருத்துவ கழிவுகளை அழிக்கும் தனியார் நிறுவன அதிகாரிகளே குற்றம்சாட்டுகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் மருத்துவ கழிவுகள் எப்படி அழிக்கப்படுகின்றன என்பதை தொடர்புடைய அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவ கழிவுகளை பாலாற்றில் கொட்டி விட்டு சென்றுவிடுகிறது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்பாடி லத்தேரி அருகே மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் காலிமனைவில் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசுகட்டுப்பாட்டு வாரியமும் இதனை கண்டும்காணாமல் இருப்பது பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் சத்தமின்றி அரங்கேறிவரும் சுகாதார சீர்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்ய உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதோடு விதிமுறைகளை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

48 மணி நேரத்தில் மருத்துவ  கழிவுகள் அகற்ற வேண்டும்

தமிழகத்தில் 1,158 மருத்துவமனைகள் உள்ளன. இதில் 304 அரசு மருத்துவமனைகளும், 854 தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. இது தவிர 1,800 அரசு ஆரம்ப சுகாதார மையங்களும், பதிவு பெறாத நூற்றுக்கணக்கான தனியார் கிளினிக்குகளும் உள்ளன. இதிலிருந்து ஒரு படுக்கைக்கு 250 கிராம் மருத்துவ கழிவுகள் சேர்ந்து விடுகிறது. இதனை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். இதனை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறினால் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: