125 நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் முடக்கம்: குளறுபடி நடவடிக்கையால் அதிருப்தி

கோவை:  தமிழகத்தில் 125 நகரங்களுக்கான புதிய மாஸ்டர் பிளான் சர்வே முடிந்தும் வெளியிடப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 17 உள்ளூர் திட்ட குழும பகுதிகள் உள்ளது. மாமல்லபுரம், சித்தோடு, ஒசூர், மதுரை பல்கலைநகர், குறிச்சி, சேலம் இரும்பாலை நகர், நாவல்பட்டு, காகிதபுரம் என்ற புதிய நகர மேம்பாட்டு திட்டமும் 2 ஆண்டாக அறிவிப்பு நிலையில் இருக்கிறது. மாநில அளவில் உள்ளூர் திட்ட குழுமங்களை மேம்படுத்த 1,703 விரிவான அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டு வந்தது.

கடற்கரை மண்டலம், மலை மண்டலம், மலை கிராம மண்டலம், தொழில் வர்த்தக மண்டலம், விவசாய மண்டலம் என பிரித்து மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி நடந்தது. திருச்சி, திண்டுக்கல், கோவை, வேலூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், நாகர் கோயில் உள்ளூர் திட்ட அலுவலங்களில் லே அவுட், கட்oட அனுமதி வழங்கிய வகையில் கடந்த ஆண்டில்  3,003 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

ஆனால் உள்ளூர் திட்ட குழுமங்களின் மூலமாக திட்ட பணிகளுக்கு எந்த தொகையும் செலவிடப்படவில்லை.  மாறாக உள்ளாட்சி நிர்வாகங்களின் மூலமாக மட்டுமே ரோடு, பாலம், சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட பணிகளுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு தொகை செலவிடப்படுகிறது. லே அவுட், கட்oடம் உருவாகும்போது அதற்கான தொகை வசூலிக்கும் திட்ட குழுமத்தினர் மேம்பாட்டு பணிகளை செய்ய மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மாநில அளவில், கடந்த 7 ஆண்டாக மேற்கொள்ளப்பட்ட மாஸ்டர் பிளான் கடந்த ஆண்டில் நிறைவு பெற்றது.  இதை நகர் ஊரமைப்பினர் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வெளியிடவில்லை. திட்டத்தை அமலாக்கவும் முன் வரவில்லை. மாஸ்டர் பிளான் திட்டம் முடக்கப்பட்ட விவகாரத்தில் பல்வேறு குழப்பங்களும், சந்தேகமும் நீடிக்கிறது. இதுவரை மாநில அளவில் 125 நகரங்களுக்கு மாஸ்டர் பிளான் (முழுமை திட்டம்) மற்றும் புது நகர் வளர்ச்சி திட்டம் (துணை நகரம்) தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 7,825 சதுர கி.மீ. பரப்பிற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை பாரதிதாசன் பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்தபோது பல்வேறு சிக்கல் தெரியவந்தது. நில உபயோக வரைபடம் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. மாஸ்டர் பிளான் வெளியானால், அதில் உள்ள குளறுபடிகளை சமாளிக்க முடியாது என நினைத்தே வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு வந்தால், பல்வேறு மாவட்டங்களில் கொந்தளிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே 125 நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் வெளியிடப்படாமல் நிறுத்தப்பட்டது. ‘முதல் மாஸ்டர் பிளான் வெளியாகும் முன்பே, இரண்டாம் கட்டமாக மத்திய அரசின் அம்ரித் திட்டத்தில் 16 நகரங்களை உள்ளடக்கிய 6,232 சதுர கி.மீ. பரப்பிற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க உத்தரவிடப்பட்டது. இதில் இதுவரை 3,521 கி.மீ. பரப்பிற்கான மாஸ்டர் பிளான் மட்டுமே நடந்துள்ளதாக தெரிகிறது. முதல் திட்டம் முடங்கிய நிலையில், அந்த இரண்டாம் திட்டம் இழுபறியாக விடப்பட்டபோது மூன்றாம் கட்டமாக விடுபட்ட பகுதிகளில் மாஸ்டர் பிளான் தயாரிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. இதை கேட்ட தொழில், வர்த்தக அமைப்புகள் அதிருப்தியடைந்தன.

ரோடு, ரயில், விமான போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களை எதிர்பார்த்திருந்த தொழில், வர்த்தக அமைப்பினர் மாஸ்டர் பிளான் வெளியாகும் முன்பே விமர்சனங்களை வெளியிட துவங்கினர். இதை சமாளிக்க உள்ளூர் திட்ட குழுமத்தினர் தொழில் அமைப்புகளிடம் மாஸ்டர் பிளானில் சேர்க்க ேதவையான அம்சங்களை கேட்டுள்ளனர்.  மாநில அளவில் முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மத்திய அரசின் நிதியில் நடக்கும் இந்த பணிகளுக்கான தொகையை வாங்க மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்சிகளில் நிதி ஒதுக்கீடு குறைந்த நிலையில், மாஸ்டர் பிளான் வெளியிட்டு திட்டங்களை அறிவித்தால் அதை நிறைவேற்றவேண்டும். கடந்த 15 ஆண்டாக முக்கிய மாவட்டம், நகரங்களில் மாஸ்டர் பிளான் அமலாகவில்லை. தொழில் பேட்டை, லாரி பேட்டை, பஸ் டெர்மினல் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரவில்லை. மாஸ்டர் பிளான் முடக்கம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

ஹாகாவில் முறைகேடு....

மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் விதிமுறை மீறல் நடக்கிறது. உள்ளூர் திட்ட குழும அனுமதியின்றி மலைப்பகுதியில் ரிசார்ட்ஸ், பண்ணை, ஆசிரமம், காட்டேஜ் பங்களாக்கள் அதிகமாகி விட்டது. ஹாகா கமிட்டியின் ஒப்புதல் இல்லாமல் பல ஆயிரம் மாடி கட்டிடங்கள் உருவாகி ட்டது. கட்டிடத்தில் கை வைத்தால் பதவி காலியாகி விடும் என பயத்தில் அதிகாரிகள் ஒன்றும் தெரியாதுபோல் ஒதுங்கும் நிலையிருக்கிறது. மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ஹாகா கமிட்டி செயல்பாடின்றி முடங்கி விட்டதால் முறைகேடுகள் தொடர்கிறது.

Related Stories: