71வது குடியரசு தினம் இன்று கோலாகல கொண்டாட்டம் டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு: தீவிரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்க தீவிர கண்காணிப்பு

* சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பங்கேற்கிறார்

* இன்று அதிகாலை பிரதமர் மோடி, அமர்ஜவான் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

* வீரதீர செயல்களை புரிந்த பாதுகாப்பு படை வீரர்கள், மாநில போலீசாருக்கு  ஜனாதிபதி பதக்கங்களை வழங்குகிறார்.

* அதிகப்பட்சமாக ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தை சேர்ந்த 108  போலீசார் பதக்கம் பெறுகின்றனர்.

புதுடெல்லி: நாட்டின் 71வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்புகள் நடத்தப்படுகிறது. அதே நேரம், குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற மத்திய அரசின் அடுக்கடுக்கான அதிரடி நடவடிக்கைகளால் நாடு முழுவதும் போராட்டக்களமாக மாறி உள்ளது. மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் காஷ்மீரில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இவை எல்லாம் தீவிரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருப்பதால், இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். மேலும், பல இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அச்சமும் நிலவி வருகிறது இச்சதிகளை முறியடிக்க, மத்திய அரசும் மாநில அரசுகளும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள்,பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  மாநில தலைநகரங்களில் நடக்கும் குடியரசு தின விழாவில், அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர். தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் காலையில் தேசியக்கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்றுகாலை தேசியக்கொடியை ஏற்றி, முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.

விமானப்படை, தரைப்படை, கடற்படையை சேர்ந்த வீரர்கள், துணை ராணுவ படையினர் இவற்றில் பங்கேற்கின்றனர். மேலும், ராணுவத்தின் பலத்தை உலகத்துக்கு பறைசாற்றும் வகையில் அதிநவீன ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் நடக்கும் குடியரசு தின கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு பிரதமர், அதிபர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழாவில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனரோ கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினமே அவர் தனது குடும்பத்துடன் டெல்லி வந்து சேர்ந்தார். டெல்லியில் நடக்கும் விழாவுக்காக நகரம் முழுவதும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழாவின்போது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வான்வெளி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க, சந்தேகத்துக்குரிய நபர்களை கண்டறிவதற்காக டெல்லியில் இம்முறை அதிநவீன ஸ்கேனிங் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த விழாவில் வீரதீர செயல்களை புரிந்த பாதுகாப்பு படை வீரர்கள், மாநில போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கங்களை வழங்குகிறார். அதில் இம்முறை மிகவும் அதிகப்பட்சமாக ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தை சேர்ந்த 108  போலீசார் பதக்கம் பெறுகின்றனர். சிஆர்பிஎப் போலீசார் 76 பேருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.

Related Stories: