×

9 புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பிப். 2ம் வாரத்தில் அரசாணை: மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து பிப். 2ம் வாரத்தில் அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்கள் கடந்த 6ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு கடந்த 11ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டதால் 335 பதவியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்தலை வரும் 30ம் தேதி நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், 27 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் நடந்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையரும், வார்டு மறுவரையறை ஆணையருமான பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், ஊரக பிரிவு முதன்மை தேர்தல் அலுவலர், நகராட்சி நிர்வாக ஆணைய அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து வரைவு அறிக்கை பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்டு, அவற்றை பரிசீலனை செய்து வார்டு மறுவரையறை இறுதி அறிக்கையை தயார் செய்ய மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்படி 9 மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அது தொடர்பான அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாணை வெளியிடப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்த பின்னர், 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும். அதன்படி பார்த்தால், பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி இறுதிக்குள் தேர்தல் முடிவடைய வாய்ப்புள்ளது. ‘9 மாவட்டங்களில் 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்’ என்று கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி மார்ச் மாதத்திற்குள் இந்த 9 மாவட்டங்களுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



Tags : GOVERNMENT ,districts ,Ward , 9 New Districts, Ward, State Election Commission
× RELATED ஒன்றிய அரசிடம் ரூ.2,000 கோடி நிவாரண நிதி...