×

தூய்மையான சென்னையை உருவாக்க பிப். 2ம் தேதி ‘பிளாக்கத்தான்’ ஓட்டம்: பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு

சென்னை: தூய்மையான சென்னையை உருவாக்க ‘பிளாக்கத்தான்’ விழிப்புணர்வு ஓட்டத்தை வரும் பிப். 2ம் தேதி பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவுள்ளது. இதில் பொது மக்கள் கலந்து கொள்ள மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நிருபர்களிடம் ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக பல்வேறு புதிய திட்டங்களை செயல்பட்டுவருகிறது. தினமும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படுகிறது. இதில் 2500 டன் கழிவுகளின் மக்கும் தன்மை உடையது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த குப்பைகளை விஞ்ஞான ரீதியாக பிரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

8 வருட ஒப்பந்த அடிப்படையில் இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தூய்மையான சென்னையை உருவாக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிப். 2ம் தேதி பெசன்டர் நகர் கடற்கரையில் பிளாக்கத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற உள்ளது. 5 கிமீ நடைபெறும் இந்த ஓட்டம் காலை 5 மணிக்கு தொடங்குகிறது. ஆரோக்கியமான தூய்மையான சென்னை மாநகரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் இந்த பிளாக்கத்தான் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம் பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என பொதுமக்கள் தங்களின் கடமையை உணர்ந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பிளாக்கத்தான் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். இதில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் www.chennaiploggathon.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்து கலந்து கொள்பவர்களுக்கு, டி-சர்ட் மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படும். குப்பையை தூக்கி வீசினாலோ, தனிநபர் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டாலும், பொது இடத்தில் குப்பைகளை எரித்தால் அபராதம் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது இதற்கான அரசு ஆணை வெளியாகி உள்ளது. இதனை நடைமுறைக்கு கொண்டுவர 90 நாட்களாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Pure Sen. ,Pip ,public , Pure Madras, Public, Corporation
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...