வனத்துக்குள் அத்துமீறல் பலிவாங்கும் யானைகள்

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வனத்துறையினரின்  எச்சரிக்கையை மீறி சட்ட விரோதமாக வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற  பெண்ணை யானை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்து கொன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை யானை தாக்கியது எப்படி? அவரை  வனப்பகுதிக்குள் அழைத்து சென்றது யார்? அவர் வனத்துக்குள் சென்றது சரியா?  என்று விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.  கோவை  கணபதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (40). கோவையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தார். இவரது கணவர் பிரசாத்.  புவனேஷ்வரி, அவரது கணவர் பிரசாத் மற்றும் நண்பர்கள் ஒவ்வொரு  ஞாயிற்றுக்கிழமையும் மலை சார்ந்த இடங்களுக்கு மலையேற்ற பயிற்சி மற்றும்  நடைபயிற்சி செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை   பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்க்கு உட்பட்ட பாலமலை வனப்பகுதிக்கு  சென்றனர். புவனேஸ்வரி, அவரது கணவர் பிரசாத் உள்பட 8 பேர் அங்கு சென்றனர்.  பாலமலை அடிவாரத்தில் தாங்கள் சென்ற வாகனங்களை நிறுத்திவிட்டு அனைவரும் 7  மைல் தூரம் மலையில் நடந்து சென்றுள்ளனர். மாங்குழி என்ற இடத்தில்  சென்றபோது திடீரென அவர்களுக்கு முன்பு வலசை சென்ற யானை வந்தது. அதை  பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். யானை அவர்களை துரத்தியது.  யானையிடம் இருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக ஓட்டம்  பிடித்தனர். பெண் என்பதால் புவனேஸ்வரியால் வெகு விரைவாக ஓடி தப்பிக்க  முடியவில்லை.   யானையிடம் வசமாக சிக்கிக்கொண்டார். துதிக்கையில் அவரை  யானை தூக்கி தரையில் அடித்தது. பின்னர் காலால் பலமாக மிதித்தது. இதில் அதே  இடத்தில் புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். புவனேஸ்வரியுடன் சென்ற மற்றவர்கள்  அதிக சத்தமிடவே யானை அங்கிருந்து சென்றது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு  சென்று புவனேஸ்வரி உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் கோவை மட்டுமல்லாது  தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினரின் தடையை மீறி  வனத்துக்குள் சென்றதால்தான் இந்த பலி சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.     சம்பவம் நடந்த மாங்குழி வனப்பகுதி பாலமலை கோவிலில் இருந்து 3 மைல்  தூரத்தில் உள்ளது, பாலமலையில் உள்ள அரங்கநாதர் கோவில் சுற்று வட்டார  பகுதியில் பெரும்பதி, பெருக்குப்பதி, குஞ்சூர்பதி உட்பட 7 மலைவாழ்   கிராமங்கள் உள்ளன.  இதில் சுமார் 500 பேர் வசிக்கின்றனர். இந்தபகுதிகளில்  யானை உட்பட பல காட்டு விலங்குகள் அடிக்கடி வந்து செல்லும். இந்த பகுதி  வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்ட பகுதியாகும். இங்கு ஏராளமாக பாறைகள்  உள்ளன. பண்டிகை காலங்களில் மட்டும் பக்தர்கள் இங்கு செல்ல வனத்துறையினர்  பாதுகாப்பு அளிப்பார்கள். மற்ற நாட்களில் மலைப்பாதையில் ஆட்கள் நடமாட்டம்  இருக்காது. அதேபோல புவனேஸ்வரியை யானை தாக்கிய மாங்குழி என்ற வனப்பகுதி 4  புறமும் காடுகளுக்கு நடுவில் உள்ள பகுதியாகும்.

மலைவாழ் மக்கள் தவிர வேறு  யாரும் இந்த பகுதிக்கு செல்லமாட்டார்கள்.   புவனேஸ்வரி மற்றும்  குழுவினர் வனத்துக்குள் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்ததால் இங்கும்  அவர்கள் சென்றதாக தெரிகிறது. அந்த பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதாக  வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தும், அத்துமீறி சென்ற நிலையில்தான்  புவனேஸ்வரி யானையிடம் சிக்கி பலியானது தெரியவந்துள்ளது. மலையேற்ற பயிற்சி  செல்லும் ஆர்வம் உள்ளவர்கள் வனத்துறையினரின் சில அறிவுரைகளை கடைபிடிக்க  வேண்டியது அவசியமாகும். வன கிராமங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்கள்,  தன்னார்வலர்கள்கூட வனத்துறையிடம் அனுமதி பெற்று மலைவாழ் மக்கள்  உதவியுடன்தான் செல்வார்கள். அவர்களுக்கு காட்டு விலங்குகளின் நடமாட்டம்  குறித்து தெரிந்து வைத்திருப்பதால் மலைவாழ் மக்கள் வழிகாட்டியாக  செயல்படுவதாக கூறப்படுகிறது.

  இது பற்றி பெரிய நாயக்கன்பாளையம்  வனச்சரக ரேஞ்சர் சுரேஷ்  கூறியதாவது:- சம்பவம் நடந்த இடம்  மலையேற்றத்திற்கான பகுதி அல்ல. வனத்துறை அனுமதி பெறாமல் யாரும் அங்கு  செல்லக்கூடாது. பிப்ரவரி மாதம் முதல் யானைகளின்  இனப்பெருக்க காலம் ஆகும். எனவே அண்டை மாநிலத்தில் இருந்தும்கூட ஜோடி தேடி  யானைகள் இங்கு வரும். எனவே வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மாலை நேரங்களில்  தனியாக யாரும் செல்லக்கூடாது. கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை  விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சுரேஷ் கூறினார்.கோவை மண்டல  வனத்துறையினர் கூறுகையில், ‘‘அனுமதியின்றி, பாதுகாப்பில்லாமல் அத்துமீறி செல்பவர்கள் ஆபத்தை சந்திக்க  வேண்டியிருக்கிறது.   வனத்துக்குள் பயிற்சிக்கு செல்ல  விரும்புபவர்கள் வனத்துறையினரிடம் அனுமதி கேட்டால் அவர்கள் கார்டு,  வாட்ச்சர்களை அனுப்பி வைப்பார்கள். இவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு  காவலர்கள் உதவியுடன் செல்லும்போது வனத்தில் பாதுகாப்பு இருக்கும்.  ஏனென்றால் போகும் வழியில் யானை நடமாட்டம் உள்ளதா? எப்போது யானைகள் இந்த  வழியாக வந்துள்ளன? அருகில் யானைகள் நடமாட்டம் உள்ளதா? என்பது அவர்களுக்கு  தெரியும்.

  யானைகளின் எச்சத்தை வைத்துகூட இதை அவர்கள்  கண்டுபிடிப்பார்கள். அந்த எச்சத்தின் காய்ந்த தன்மையை வைத்து யானைகள் அந்த  இடத்துக்கு வந்து சென்ற நேரத்தை அவர்கள் அறிந்துவிடுவார்கள். வெகு அருகில்  யானைகள் நடமாட்டம் இருந்தால் சிலர் வாசனை மூலமாகக்கூட அறிந்துவிடுவார்கள்.  அதன்மூலம் அவர்கள் பாதுகாப்பாக வனத்துக்குள் அழைத்து செல்ல முடியும்.   யானைகள் நடமாடும் இடம் அவர்களுக்கு தெரிந்தால் மாற்று வழியில் அழைத்து  செல்வார்கள். ஆனால் நாமாக சென்றால் யானைகள் நடமாடுவது தெரியாமல் அவற்றின்  முன்பு சென்று சிக்க நேரிடும். தற்போது வெயில் அடிப்பது ஆரம்பித்து  விட்டதால் வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் யானைகள் தண்ணீர் தேடி அலையும்  நிலை உள்ளது. அவ்வாறு அவை திரியும்போது அதன் வலசை பாதையில் நாம் சென்றால்  அவற்றிடம் சிக்க நேரிடும்.   மலையேற்ற பயிற்சி செல்வது அவரவர்  விருப்பம். ஆனால் வனத்துக்குள் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்ற சில  வரைமுறைகள் உள்ளன. அதை கடைபிடிக்க வேண்டும். அதை செய்யாமல் அத்துமீறி  சென்றால் யானைகள் பலிவாங்கும் சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது.  இவ்வாறு  வனத்துறையினர் கூறினர்.

800 யானைகள்

கோவை,  நீலகிரி தெற்கு, வடக்கு, கூடலூர் வனப்பகுதியை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில்  சுமார் 800 யானைகள் வசிக்கின்றன. கோவை வன கோட்டத்தில் 420 யானைகள்  வசிப்பதாக தெரிகிறது. இதில் 50 முதல் 60 சதவீத யானைகள் காட்டை விட்டு  கிராமங்களுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. ரோடுகளிலும் யானைகள் கூட்டமாக  சென்று வாகனங்களை மறிப்பது வாடிக்கையாகி விட்டது.

5 ஆண்டில்  139 பேர் பலி

கடந்த  5 ஆண்டில் கோவை வன மண்டல பகுதியில் யானை தாக்கி 139 பேர் இறந்துள்ளனர்.  கோவை வன  கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் 2015ம் ஆண்டில் 5 பேர், 2016ம் ஆண்டில் 11  பேர், 2017ம் ஆண்டில் 15 பேர், 2018ம் ஆண்டில் 17 பேர், 2019ம் ஆண்டில் 15  பேர் இறந்துள்ளனர். யானை தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் கூடுதலாக  இருக்கிறது. கடந்த ஆண்டில் கணேசபுரத்தில் ஒரு வீட்டை இடித்து தள்ளி  சிறுமியை கொன்றது. இதி்ல் சிறுமியின் தந்தை பலத்த காயமடைந்தார். மருதமலை  கோயில் செல்லும் பாதையிலும், வெள்ளிங்கிரி மலை செல்லும் பாதையில் யானை  தாக்கி 2 பேர் இறந்துள்ளனர்.

வனத்தை வளைத்த தொழிற்சாலைகள்

கோவை வன கிராமங்களில் பெரிய தொழிற்சாலைகள் அதிகமாகி வருகின்றன. சின்ன தடாகம்,  சோமையனூர், சோமையம்பாளையம், மாங்கரை வட்டாரத்தில் 300க்கும் மேற்பட்ட  தொழிற்சாலைகள் யானைகளை மிரள வைக்கின்றன. ‘தடாகம் பள்ளத்தாக்கு’ செங்கல்  பாதாளமாக மாற்றப்பட்டது. இங்கே யானைகளின் இறப்பும் அதிகமாகி வருகிறது.  ஆன்மீக தலங்கள், காப்பகங்கள், கல்வி நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள்  இருப்பதால் மக்கள் வன எல்லையில் குவியும் நிலையிருக்கிறது. வாழிடம் பறி  போவதால் ஆவேச தாக்குதலில் யானைகள் ஈடுபடுகின்றன. அமைதியாக இருந்த  சின்னத்தம்பி, மதுக்கரை மகாராஜ் போன்ற யானைகள் ‘கில்லர் யானைகளாக’  மாறியதற்கு மனிதர்களின் அத்துமீறல்கள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அகழியை   சீரமைக்க வேண்டும்

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறுகையில், ‘‘ வன எல்லை  கிராமங்களில் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். அகழிகளை  சீரமைக்க வேண்டும். யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் பாதுகாப்பில்லாமல்  மலையேற அனுமதிக்கக்கூடாது. யானைகளால் மக்களுக்கும், மக்களால்  யானைகளுக்கும் பாதிப்பு இல்லாத நிலையை ஏற்படு–்த்தவேண்டும். ராக்கெட் வெடி  வைத்து விரட்டும் நடவடிக்கைகளால் யானைகள் மனிதர்கள் மீது கோபத்தில்  இருக்கின்றன. பதற்ற நிலையில் உள்ள யானைகள் மனிதர்களை நேருக்கு நேர்  சந்திக்கும் போது தாக்குதலை நடத்துகின்றன’’ என்றார்.

Related Stories: