கெத்து காட்டும் ஆடி கியூ-8

ஆடி கார் நிறுவனத்தின் கியூ பிராண்டில் சொகுசு எஸ்யூவி ரக கார் மாடல்கள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆடி கியூ வரிசையில் மிக அதிக விலை கொண்டதாக கியூ-8 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரின் விருப்பமாக இருந்து வரும் ஆடி கியூ-7 சொகுசு கார் மாடலைவிட இந்த கியூ-8 கார் அதிக விலை கொண்டது. ஆனால், கியூ-7 சொகுசு எஸ்யூவி ரக கார் 7 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், கியூ-8 கார் 5 சீட்டர் மாடலாக வந்துள்ளது. மேலும், இது முழுமையான எஸ்யூவி ரக கார் போல் அல்லாமல், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், போர்ஷே கேயென் கூபே போன்ற எஸ்யூவி கூபே ரக மாடல்களுக்கு நிகரான வடிவமைப்பு ரகத்தில், கிராஸ்ஓவர் டிசைனில் அசத்துகிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட், முகப்பில் பிரம்மாண்ட கிரில் அமைப்பு, பின்புறம் தாழ்வாக இருக்கும் கூரையுடன் கூபே போன்ற வடிவமைப்பு, 21 அங்குல இரட்டை வண்ண அலாய் வீல், இரண்டு டெயில் லைட்டுகளும் இணைந்தது போன்ற வடிவமைப்பு, ஸ்பிளிட்டர் மற்றும் இரட்டை சைலென்சர் அமைப்பு ஆகியவை கெத்து காட்டுகிறது.

இரண்டு தொடுதிரைகளுடன்கூடிய இன்போெடயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கட்டுப்பாட்டு சாதனம் அனைவரையும் கவர்கிறது. இது, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாதனங்களை சப்போர்ட் செய்கிறது. 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப் ஆகியவை இதர முக்கிய அம்சங்களாக உள்ளன. இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், 8 ஏர்பேக்குகள், டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்ப வசதி, 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், லேன் சேஞ்ச் வார்னிங் சிஸ்டம் ஆகியவையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. மிகச்சிறப்பான பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் பெற்றுள்ளது. இந்த கார், யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த இன்ஜன் அதிகபட்சமாக 340 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அத்துடன் 48v மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சக்கரங்களுக்கும் இன்ஜின் பவர் ஆடி க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக செலுத்தப்படுகிறது. இந்த கார், 58 விதமான வண்ணத்தேர்வுகளில் கிடைக்கிறது. 11 விதமான இன்டீரியர் தீம்களையும், 9 விதமான மர அலங்கார வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், போர்ஷே கேயென் கூபே, பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கூபே கார்களுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது. 1.33 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: