×

புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி

பிஎஸ்-6 இன்ஜின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. இதுவரையில் விற்பனையில் இருந்த 5ஜி மாடலைவிட 6ஜி மாடலில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.இதன் நீளம் அதிகரிக்கப்பட்டு, அகலம் மற்றும் உயரம் சற்றே குறைக்கப்பட்டுள்ளது. புதிய டெலிஸ்கோப்பிக் போர்க்குகள் மூலமாக கிரவுண்ட் கிளியரன்ஸ் 18 மி.மீ. அதிகரிக்கப்பட்டாலும், தரையிலிருந்து இருக்கை உயரம் பழைய மாடலின் அளவிலேயே தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. வீல்பேஸ் நீளமும் 22 மி.மீ. அதிகரித்துள்ளது. கால் வைப்பதற்கான இடவசதி குறிப்பிடதக்க அளவு அதிகரித்துள்ளதும் வரவேற்கத்தக்க விஷயம். பெட்ரோல் டேங்க் மூடி இருக்கைக்கு கீழ் இல்லாமல், வெளியில் இருந்தே திறந்து மூடும் வகையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரிமோட் முறையில் திறக்கும் வசதி உள்ளதால், பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும்போது எளிதாக பெட்ரோல் நிரப்ப வழி வகை செய்யப்பட்டுள்ளது. இனி, இருக்கையை திறக்கும் அவசியம் இருக்காது. ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரில் 10 அங்குல முன்புற சக்கரம் இருந்தது. தற்போது இது 12 அங்குலமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் 3 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன்கூடிய சஸ்பென்ஷன் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஏற்கனவே இருந்தது போலவே, இரண்டு சக்கரங்களிலுமே 130 மி.மீ. டிரம் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு பிரேக்குகளும் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக கட்டுப்படுத்தப்படுவதால், சிறப்பான பிரேக்கிங் திறனை பெற முடியும். பிரேக்கிங் சிஸ்டத்தில் எந்த மாற்றம் இல்லை. இந்த ஸ்கூட்டர், புரோகிராம்டு பியூவல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் கொண்ட புதிய பிஎஸ்-6 இன்ஜினுடன் வந்துள்ளது. இது மிக சீரான செயல்திறனை வழங்குகிறது. அதாவது, அதிகபட்சமாக 7.68 பிஎச்பி பவரையும், 8.79 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இப்புதிய மாடல் ஸ்கூட்டர், லிட்டருக்கு 65 கி.மீ. மைலேஜ் தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய மாடலில் இருந்த செல்ப் மோட்டாருக்கு பதிலாக, ஏசிஜி என்ற புதிய ஸ்டார்ட்டர் மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது சப்தம் இல்லாமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் வசதியை அளிக்கிறது. எல்இடி ஹெட்லைட், மல்டி பங்ஷன் கீ சிஸ்டம், இன்ஜினை தற்காலிகமாக ஆப் செய்வதற்கான பிரத்யேக சுவிட்ச், 18 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ஸ்பேஸ் இடவசதி ஆகியவை முக்கியமானதாக உள்ளது. ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட் 63,912 விலையிலும், டீலக்ஸ் வேரியண்ட் 65,412 விலையிலும் (எக்ஸ்ஷோரூம்) விற்பனைக்கு வந்துள்ளது.

Tags : Honda , Honda Activa 6G
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...