போலீஸ் சேனல்: மாட்டுவண்டில வேண்டாம், நைட்ல லாரி, டிராக்டர்ல கடத்துங்க காக்கி அட்வைஸ்

ஆரணி தாலுகாவிற்கு உட்பட்ட கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் இருந்து மாட்டு வண்டிகள், டிராக்டர், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் மணல்கொள்ளை அரங்கேறி வருகிறது. இந்த பகுதி ஆரணி தாலுகா காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது. இதில் தாலுகா காவல்நிலைய காக்கிகளின் உயர் அதிகாரி முதலில் மணல்கொள்ளையர்களின் விவரங்கள் முழுவதையும் பட்டியல் போட்டாராம். இதனால் ஐயா, மணல்கொள்ளையை முழுவதுமாக தடுத்துவிடுவார் போல என்று மற்ற காக்கிகள் எண்ணியுள்ளனர். ஆனால் அதற்கு மாறாக, யார்? யார்? சரியாக மாமூல் வழங்குகிறார்கள், மாமூல் வழங்காமல் ஏமாற்றுகிறார்கள்? என்று பார்ப்பதற்காகத்தான் பட்டியல் போட்டாராம். இதைவிட கொடுமை, மாட்டுவண்டிகளில் மணல் கடத்தினால் மட்டும் வழக்கு போட்டு கைது செய்துவிடுவாராம். காரணம் டிராக்டர், லாரிகளில் மணல் கடத்துபவர்களுக்கு மாட்டுவண்டிக்காரர்கள் இடையூறாக இருக்கிறார்களாம். மேலும் மாட்டுவண்டில மணல் கடத்தாதீங்க, மக்கள் அதிகமாக புகார் சொல்றாங்க, லாரி, டிராக்டர்ல மணல் கடத்துங்க என்று தலைமை காக்கி அட்வைஸ் கொடுக்கிறாராம். இப்படியே போனால் கமண்டல நாகநதி, செய்யாற்றுபடுகை முழுவதையும் சுரண்டிவிடுவார் போல என்று சக காக்கிகள் புலம்பித் தள்ளுறாய்ங்க...

Advertising
Advertising

உளவுத்துறைக்கும் பிப்டி... பிப்டி... பங்கு...  தொடருது கொள்ளை...!

கோவை புறநகர் மாவட்ட காவல்துறையில் பெரியநாயக்கன்பாளையம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் வீடு, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தொடர் கொள்ளை நடக்கிறது. நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியும் தொடர்கிறது. அடுத்தடுத்து நடக்கும் இக்குற்றச்செயல் காரணமாக இங்குள்ள மக்கள் கடும் பீதியில் உள்ளனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் போலீஸ் பிடியில் சிக்குவதில்லை. காரணம், வலுவான கூட்டணி. இப்பகுதியில் கைவரிசை காட்டும் கொள்ளையர்கள், இங்குள்ள சப்-டிவிஷன் மூன்றெழுத்து பதவிகொண்ட அதிகாரி முதல் கடைநிலை அதிகாரி வரை எல்லோரையும் குளிர வைத்து விடுவதால், ஒட்டுமொத்த போலீசும் கொர்....விடுகிறது. அதனால், கொள்ளையர்கள் உற்சாகமாக தங்களது வேட்டையை தொடர்கின்றனர். கொள்ளையர்களிடம் காசு பார்க்கும் இந்த அதிகாரிகளை களை எடுக்க வேண்டாமா? என ஊர் மக்கள் கொந்தளிக்கின்றனர். இதன் எதிரொலியாக ஊரே திரண்டு மறியல் போராட்டம் நடத்தியது. உளவுப்பிரிவு அதிகாரிகள் மேலிடத்தில் போட்டுக்கொடுத்து விடக்கூடாது என பயந்து, அவர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு, பிப்டி... பிப்டி... பங்கு பிரிக்கிறார்கள் இந்த சப்-டிவிஷன் அதிகாரிகள். வேலியே பயிரை மேயுது, எங்கே போய் சொல்வது இந்த கொடுமையை? என்கிறார்கள் ஊர் மக்கள்...!

கஷ்டம் எல்லாம் எங்களுக்கு... ‘கமகம’ விருந்து அவங்களுக்கா... ?

மதுரையில் மாவட்ட, மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டும் கடந்த வாரம் தடபுடலாக அசைவ விருந்து வைத்துள்ளார் ஒரு பெண் போலீஸ் உயரதிகாரி. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பிரச்னைகள் எதுவுமின்றி முடித்துத் தந்ததற்கான பாராட்டாகவே இந்த விருந்து நடத்தப்பட்டதாம். எஸ்ஐ முதல் மாநகர, மாவட்ட உயரதிகாரிகள் வரையில் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர். போலீசார் வழக்கம்போல ஸ்டேஷனில் இருந்து பணிகளை செய்ய வேண்டி இருந்திருக்கிறது. உயரதிகாரிகளின் ஜீப் டிரைவர்கள் நிலமையோ படுமோசம். விருந்து நடைபெற்ற இடத்திற்கு அதிகாரிகளைக் கொண்டு போய் விட்டு விட்டு, வெளியே அவர்கள் ஜீப்பில் பசியோடு இருந்தபடியே, அத்தனை விருந்தினையும் அதிகாரி முடித்து விட்டு வரும் வரையிலும் காத்திருந்தார்களாம். இது இப்போது அதிருப்தியில் தவிக்கும் போலீசார் மத்தியில் பெரும் ‘முணுமுணுப்பாக’ உருமாறிப் போயிருக்கிறதாம். அதாவது, உள்ளாட்சி தேர்தல், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயரதிகாரிகளை விட களத்தில், இரவு பகலாக  உணவு, உறக்கமின்றி கஷ்டப்பட்டது நாங்கள்தான். ஆனால் அதிகாரிகளுக்கு மட்டுமே விருந்து என்றால் அதில் என்ன நியாயமிருக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

கல்லா கட்டும் மூவர் கூட்டணி கண்ணீர் வடிக்கும் காக்கிகள்

மாங்கனி மாவட்டத்தில் கைலாசநாதர் கோயில் உள்ள ஊரின் ஸ்டேஷனில், அனைத்து முடிவுகளையும் கச்சிதமாக எடுத்து கல்லா கட்டும் மூவர் கூட்டணி அமைஞ்சிருக்காம். இந்த ஸ்டேஷனில் இன்ஸ்., பணியிடம் காலியாக இருப்பதால் மெயின் எஸ்ஐ, ரைட்டர், தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐனு மூவர் கூட்டணி அமைச்சிருக்காங்களாம். ஸ்டேஷனுக்கு வரும் அனைத்து புகார்களையும் விசாரித்து, மேலிடத்தில் மறைக்க வேண்டியதை நைசாக மறைத்து கல்லா கட்டுவதில் இவர்கள், படு கில்லாடிகளாம். மற்ற காக்கிகளுக்கு இவர்கள் பங்கு கொடுப்பதை நிறுத்திக் கொண்டதால், இந்த விஷயம் தற்போது உயர் அதிகாரிகள் காதுக்கு போயிருக்காம். அதிலும் சில காக்கிகள், கண்ணீர் வடித்தபடி தினமும் ஒரு புகாரை மேலிடத்திற்கு ரகசியமாக தட்டிவிட்டுக்கொண்டு இருக்காங்களாம். இதனால, விரைவில் அந்த கூட்டணி உடைந்து போயிடும்னு நம்பிக்கையோடு இருக்காங்களாம் பாதிக்கப்பட்ட காக்கிகள்.

Related Stories: