×

போலீஸ் சேனல்: 40 லட்சத்தை வசூலிக்க திணறும் மாஜி டி.எஸ்.பி.

குமரி மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் டி.எஸ்.பி. ஒருவர், இங்கு பணியில் இருந்த போது நாகர்கோவிலில் லாட்ஜில் தங்கி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். மாவட்டத்தில் இருந்து மாறி சென்ற பின்னரும், வாரந்தோறும் வந்து கடன் வசூலில் இறங்கினார். இதற்காக ஏஜென்டுகளும் இருந்தனர். பணியில் இருந்ததால் கடன் வாங்கியவர்கள் பயந்து போய் அசலுடன் வட்டியை முறையாக கொடுத்தனர். ஆனால் ஓய்வு பெற்ற பின், கடன் வசூலில் பெரும் மந்தம் ஏற்பட்டுள்ளது. முறையாக யாரும் பணத்தை கொடுப்பது கிடையாது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் முன்னாள் டி.எஸ்.பி.யிடம் ₹50 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். இதில் ₹10 லட்சம் மட்டும் கொடுத்து உள்ளாராம். இன்னும் ₹40 லட்சம் வசூலிக்க வேண்டி உள்ளதாம். இந்த பணத்தை கொடுக்காமல், இழுத்தடிப்பு செய்து வருகிறாராம். இப்போது பதவியில் இல்லாததால், பெரிதாக மரியாதை இல்லையாம். உள்ளூர் போலீசாரிடம் பேசி, மிரட்டி பணத்தை வாங்கி தருமாறு கூறி இருக்கிறார். நாங்க ஒண்ணும் செய்ய முடியாது என அவர்கள் கையை விரித்து விட்டனர். இதனால் இந்த பணத்தை எப்படி வசூலிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் ₹50 லட்சத்துக்கு கணக்கு காட்ட வேண்டிய சிக்கல் வந்து விடும் என்பதால், மவுனமாக எப்படி வசூலிப்பது என சிலரிடம் ஆலோசனை கேட்டு வருகிறாராம்.


மணல் கடத்தலில் ‘விசுவாசம்’ கல்லா கட்டும் போலீசார்
நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் தினமும் குறிப்பாக இரவு நேரங்களில் மணல் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. லாரிக்கு ஒருரேட், டிப்பர் லாரிக்கு ஒருரேட், டிராக்டருக்கு ஒருரேட், மாட்டுவண்டிக்கு ஒரு ரேட் என போலீசார் தரம்பிரித்து மணல் கடத்தலுக்கு வசூல்வேட்டையில் இறங்கியுள்ளனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு சில போலீசார் பணம் பார்த்து வருகின்றனர். இரவு நேரங்களில் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் எந்த பகுதிகளில் சோதனை நடத்துகின்றனர் என்பது குறித்து சில போலீசார் மணல் கடத்தும் நபர்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தகவல் தெரிவித்து விடுகின்றனர். திடீரென அதிகாரிகள் தங்களது சோதனை நடத்தும் இடத்தை மாற்றினால்கூட உடனே போலீசார் உஷாராகி சோதனை நடத்தும் இடத்தை மணல் கடத்தல்காரர்களுக்கு போட்டு கொடுத்து, மணல் கடத்தல்கார்களுக்கு விசுவாசமாக நடந்து கல்லாகட்டுவதாக அரசு துறையினரே புலம்புகின்றனர்.

ஆட்டையப்போடும் அந்த ஜோடி...!
கோவை மாநகரில் உள்ள இரு உயர் போலீஸ் அதிகாரிகளை மீறி, எந்த ஒரு தகவலும் மாநகர போலீஸ் கமிஷனர் காதுக்கு சென்றடைவதில்லை. கஞ்சா சப்ளை, மசாஜ் சென்டர் விபசாரம், நகை கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வித, விதமான சட்ட விரோத செயல்கள் நடந்தாலும், அவற்றில் சிலவற்றை மட்டுமே இந்த இரு அதிகாரிகளும் கமிஷனர் பார்வைக்கு கொண்டு செல்கின்றனர். மீதமுள்ளவற்றை இருவரும் பேசி முடித்து, பல லகரங்களை ஆட்டையப்போட்டு விடுகின்றனர். அத்துடன், மாநகரில் உள்ள 15 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களும், குறிப்பிட்ட சதவீதத்தை மாமூலாக கொடுத்துவிட்டு, எதுக்குப்பா வம்பு... என ஒதுங்கிக்கொள்கின்றனர். மாநகரில், சட்ட விரோத செயல்கள் நடப்பதும், நடக்காமல் தடுப்பதும் இந்த இரு அதிகாரிகள் கையில்தான் உள்ளது. ‘’பாவம், கமிஷனர்...’’ என்கிறார்கள், விவரம் அறிந்த அதிகாரிகள்.

நகர மறுக்கும் ஏசி., தொடரும் ஆசி...!
கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் உதவி கமிஷனர்களில் ஒருவர், பல ஆண்டு காலமாக இங்கேயே முகாம் போட்டுள்ளார். வெளிமாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் போட்டாலும் மீண்டும் இங்கேயே வந்துவிடுகிறார். இவர், ஏற்கனவே மாநகர உளவுப்பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தியவர். உயர் பதவியில் இருக்கும் இவர், மாநகரில் தள்ளுவண்டி டிபன் கடை, பெட்டிக்கடை, பிரியாணி கடை, துணிக்கடை, நகைக்கடை என எதையும் விட்டு வைப்பதில்லை. அன்றாட மாமூல் வசூலை கச்சிதமாக முடித்து விடுகிறார். இதற்காக, தனக்கு கீழ் நிலையில் உள்ள இரு அதிகாரிகளை கைக்குள் போட்டு வைத்துள்ளார். எங்கே தன் மீது மேலதிகாரிகள் பார்வை திரும்பி விடுமோ என பயந்து, அதிகார மட்டத்தில் இருப்பவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து, நல்லபிள்ளையாக நடந்துகொள்கிறார். கோவை மாநகரை விட்டு வெளியே செல்ல விரும்பாத இந்த ‘ஏசி’க்கு சிலரது ஆசி இருக்கிறது. புகையிலை பொருட்கள், லாட்டரி, டாஸ்மாக், மசாஜ் சென்டர் என வருமானம் தொடர்வதால், இவரால் கோவையை விட்டு நகர முடியவில்லை. இவரது வேட்டை ஸ்டைலை பார்த்து, பல போலீஸ் அதிகாரிகள் வியந்து போகிறார்கள்.

வசூலில் உச்சத்தை தொட்ட  இன்ஸ் காட்டுறார் கெத்து
கோவை மாநகரை ஒட்டியுள்ள, ஒரு காவல் நிலையத்தில் தங்கமான பெயர் கொண்ட ஒரு ஆய்வாளர் பணி புரிகிறார். இவர் மீது லஞ்ச புகார்கள் அடுத்தடுத்து குவிந்த வண்ணம் உள்ளன. கோவை புறநகர் மாவட்ட காவல்துறையில் யாருக்குமே கிடைக்காத ‘நற்பெயர்’ இவருக்கு கிடைத்துள்ளது. அதாவது, வருமானத்திற்கு அதிகமாக 4 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளார் என இவர் மீது ‘லோக் ஆயுக்தா’வில் புகார் செய்யப்பட்டுள்ளது. அப்புகார் மனுவும் ஏற்கப்பட்டு, இப்பகுதியை சேர்ந்த தறி குடோன் உரிமையாளருக்கு, ஏற்பு ரசீது கிடைத்துள்ளது. மக்கள் பிரச்னையை தீர்த்துவைத்து, சிறந்த ஆய்வாளர் என பெயரெடுக்க வேண்டிய பலர், வசூலின் உச்சத்தை தொட்டு அதில் பெயர் எடுத்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக இவர், யாருமே தொட முடியாத உச்சத்தை எட்டியுள்ளார். விசாரணை களத்தில் இறக்கப்பட வேண்டிய இவரோ, கால் மேல் கால் போட்டுக்கொண்டு, வி.வி.ஐ.பி.க்கள் எல்லாம் எனக்கு வேண்டப்பட்டவர்கள்... என விளக்கம் அளிக்கிறார். உஷ்... இப்பவே கண்ண கட்டுதே...! என்கிறார்கள் ஊர் மக்கள்.



Tags : Police Channel , Police Channel, former DSP
× RELATED போலீஸ் சேனல்