இந்த வார பிரச்னைகள் : மக்களின் பார்வையில்

சாலையில் ஓடும் கழிவுநீர்

மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள பழையனூர் சாலை கிராமத்தில் சாலையோரங்களில் உள்ள கால்வாய்கள் தூர்ந்து போய் விட்டதால் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது.  இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சிறுவர்கள் விளையாட முடியவில்லை. துர்நாற்றமும் வீசுகிறது. சுமார் நான்கு ஆண்டுகளாக இதே நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே இந்த கால்வாய்களை சீரமைக்க வேண்டும். -செல்வராணி, பழையனூர் சாலை.

ஏரியையே குட்டையாக மாற்றி விட்டார்கள்

ஆதம்பாக்கம் ஏரியின் ஒரு பகுதி சாலைமேம்பாட்டிற்காகவும், பறக்கும் ரயில்திட்டத்திற்காக ஒரு பகுதியும் கையகப்படுத்தப்பட்டு தற்போது ஏரி குட்டை போல் காணப்படுகிறது. இதையாவது காப்பாற்ற பொதுபணித்துறையினர் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். ஆதம்பாக்கம் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் ஏரியில் கலக்கிறது. இதனால் இந்த சாக்கடை நீர் செல்லும் வழித்தடங்களில் துர் நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது இதனால் இரவு நேரங்களில் அந்த சாக்கடை நீர்செல்லும் சுற்றுபுற மக்கள் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள்.-பாபு, கட்டுமான தொழில், பழவந்தாங்கல்.

மாடுகளை கொல்லும் மருந்து கழிவுகள்

மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கிழக்கு பொத்தேரி ஏரியை ஒட்டி தனியார் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில்  மருத்துவ கல்லூரி,பொறியியல் கல்லூரி, மருத்துவமனை, ஓட்டல், ஆகிய பகுதியில் இருந்து தினமும் கழிவுகள் கொட்டப்படுகிறது. பல ஆயிரம் டன் குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள், சுத்திகரிக்கப்படாமல் அப்படியே கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் காற்று மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. சுத்திகரிக்கப்படாத மருத்துவ கழிவுகளை உட்கொள்ளும் மாடுகள் ஜீரணகோளாறு ஏற்பட்டு இறந்துவிடுகிறது. இந்த தனியார் குப்பை கிடங்கை அகற்றக்கோரி பலமுறை நகராட்சிக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

-அரங்க.கிரிசந்திரன், சமூக ஆர்வலர், நின்ன காட்டுர்.

பாவம்ங்க பள்ளி குழந்தைங்க...

தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.  எனவே இதை சீரமைத்து காலை மாலை வேளைகளில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் -சுரேஷ்.தனியார் நிறுவன ஊழியர்,தண்டையார்பேட்டை.

புறக்கணிக்கப்பட்ட புறக்காவல் நிலையம்

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக அம்மையார்குப்பம் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் புறக்காவல் நிலையம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. ஆனால் இப்போது செயல்படுவதில்லை. பலமுறை வலியுறுத்தியும் திறந்தபாடில்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு புறக்காவல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

-தாமோதரன், விசைத்தறி தொழிலாளி, அம்மையார்குப்பம்.

புறவழிச்சாலை எங்கே?

பெரியபாளையம் பகுதியில உள்ள புகழ் பெற்ற பவானி அம்மன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வழியாக ஆந்திராவில் இருந்து வரும் கனரக வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்காக புறவழிச்சாலை அமைக்க அளவீடு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பெரியபாளையத்திற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

-பாஸ்கர், வக்கீல், பெரியபாளையம்.     

நடைபாதையில் குப்பைமேடு

எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பு 2 ல்  இருந்து எர்ணாவூர்  மார்க்கெட்டுக்கு போகக் கூடிய பாதையில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனால் இந்த வழியாக நடந்து செல்ல சிரமப்படுவதோடு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்றி நடைபாதை சுத்தமாக இருக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஏ.அஹ்மத்ஷரீப், மின்வாரிய ஊழியர், எர்ணாவூர்.

மாடு, குதிரைகள் தொந்தரவு

சென்னை 4வது மண்டலத்துக்குட்பட்ட கொடுங்கையூர் சிட்கோ நகர் மெயின் ரோடு பகுதியில் காலையில் சாலைகளில் இருபுறமும் குதிரைகள் மற்றும் மாடுகள் நடுரோட்டில் சுற்றியும் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்    -ராஜலட்சுமி, கல்லூரி மாணவி, முல்லைநகர் பகுதி.

ரொம்ப இம்சை கொடுக்கிறாங்க...

பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் சாலைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணியால், அடிக்கடி மேலிருந்து தவறி கீழே விழும் கட்டுமானப் பொருள்கள், வாகன ஓட்டிகளை பதம் பார்க்கிறது. மேலும் கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் ஜிஎஸ்டி சாலையிலேயே தாறுமாறாக பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது.-சதீஷ், குடியிருப்போர் நலச் சங்கம், பல்லாவரம்.

அவசரத்திற்கு எங்கே ஒதுங்கணும்?....

செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிறு குறு கடைகளும் உள்ளது. இப்பகுதியில் பொது கழிப்பறை வசதி இல்லை. இதனால் பயணிகளும் கடைகளில் வேலை செய்பவர்களும் அவசர காலங்களில் இயற்கை உபாதைகள் கழிக்க இடமில்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் இலவச பொது கழிப்பறை அமைத்து தர அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-லோகு,அரிசி கடை உரிமையாளர், எல்லையம்மன் கோயில் பகுதி.

குடிநீருக்காக அலையும் பொதுமக்கள்

மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சி 7 வது வார்டில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 4 க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதனால் மக்களுக்கு போதுமான  குடிநீர் கிடைக்கவில்லை.  பல மைல் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. -பெ.வெங்கடேசன், இன்ஜினியர், மணமை.

எல்லாம் உடைஞ்சி கிடக்குது..

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் வடக்கு முல்லை நகர், ஜாக் நகர், எஸ்.வி.டி நகர், எஸ்.எஸ் நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி எந்திரங்கள், மின் விளக்குகள்  உடைந்து கிடக்கின்றன. மேலும், மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பூங்காக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.  இதனால், பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன.

-அ.அஜீஸ், திருமுல்லைவாயல்.

பாராக மாறிய பள்ளிகள்

பள்ளிகளில் காவலர்கள் இல்லாததனால் அந்தந்த பகுதியை சேர்ந்த சமூக விரோதிகள், பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மதுப்பிரியர்கள் பள்ளி வளாகங்களை இலவச பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், வாட்டர் பாக்கெட் கவர்கள் என அனைத்தும் போட்டு விட்டு குப்பைமேடாக்கி சென்றுவிடுகின்றனர். இதனால்  பள்ளிக்கு வரும் பள்ளி மாணவ மாணவிகள் காலையிலே சிரமத்துடன் வகுப்பறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை சரி செய்ய பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குருசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர், புழல்.

4 ஆண்டுகளாக திறக்காத தங்கும் விடுதி

திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு 3 கோடி ரூபாய் செலவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்கும் விடுதி, திருமண மண்டபம் போன்றவை கட்டப்பட்டது. ஆனால் இவை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 16 கால் மண்டபத்திலேயே பாதுகாப்பற்ற நிலையில் படுத்து உறங்கும் நிலை உள்ளது. ஆகவே இந்தக் கட்டிடங்களை பக்தர்களின் பயன்பாட்டுக்காக திறந்து விட வேண்டும். -த.குமரன், பேருந்து ஓட்டுனர், திருப்போரூர்.

Related Stories: