தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி விசாரிப்போம்: ஒருநபர் ஆணைய வக்கீல் பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் நடந்த போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம்  விசாரணை நடத்தி வருகிறது. ஒருநபர் ஆணையத்தின் 18வது கட்ட விசாரணை கடந்த 22ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது. விசாரணைக்கு பிறகு ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறுகையில், 18ம் கட்ட விசாரணை முடிந்துள்ளது. இதில் 704 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 445 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 630  ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.  அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முந்தைய ஒரு வார காலத்தில் தூத்துக்குடி கலெக்டர்  அலுவலகத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கேட்டுள்ளோம்.  

அடுத்தகட்ட விசாரணையில் போலீஸ் அதிகாரிகள், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள், தடயவியல் வல்லுநர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போன்றோரும்  விசாரிக்கப்பட உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், பேட்டியில் ஒரு சில குறியீடுகளை பேசியுள்ளதாக இங்கு சாட்சிகளாக ஆஜரானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனவே தேவைப்படும் நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி  விசாரணை நடத்தப்படும். அடுத்தகட்ட விசாரணையின் போது கூட நடிகர் ரஜினிகாந்தை ஆஜராக அழைக்கலாம் என்றார்.

Related Stories: