×

தமிழகத்தின் கிருஷ்ணம்மாள், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

* விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரலில் டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.
*  விருது பெறுபவர்களில் 34 பேர் பெண்கள் ஆவர்.

புதுடெல்லி: மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர்கள் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், எஸ்.ராமகிருஷ்ணன், பம்பாய் சகோதரிகள் உட்பட மொத்தம் 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும். இதன்படி, சமூக சேவை, ஆன்மீகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியில் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உடுப்பி பெஜாவர் மடத்தின் ஜீயரான சுவாமி விஷ்வேஷா தீர்த்தர் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்ட 7  பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. சமூக நீதிக்கு எதிராக காந்திய வழியில் போராடி நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் பெற்றுத் தந்த தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், டிவிஎஸ் நிறுவன சேர்மன் வேணு சீனிவாசன், புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர்  மனோஜ் தாஸ், மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இதே போல, அமர் சேவா சங்கத்தின் மூலம் 14,000 மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றிய தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், அசாமில் 70,000 கேன்சர் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து தனது வாழ்வை  அர்ப்பணித்த சென்னை டாக்டர் ரவி கண்ணன், கர்நாடக இசையில் பல சாதனை படைத்த பம்பாய் சகோதரிகளான லலிதா-சரோஜா சிதம்பரம், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், நாதஸ்வர வித்வான்கள் கலி ஷாபி மகபூப், ஷேக் மகபூப் சுபானி,  பிரதீப் தாளபில் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 118 பேருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் அசத்தும் ஜித்து ராய், வில்வித்தையில் பதக்கங்கள் குவிக்கும் தருண்தீப் ராய், இந்திய ஹாக்கி அணி வீராங்கனை ராணி ராம்பால், இந்திய கால்பந்து அணி வீராங்கனை ஓ.பி.தேவி, கிரிக்கெட் வீரர்  ஜாகிர்கான் ஆகிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளும், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், எக்தா கபூர், கரண் ஜோகர் உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கும் பத்ம  விருது அறிவிக்கப் பட்டுள்ளது.


Tags : Padma ,persons ,S. Ramakrishnan Krishnammal ,S. Ramakrishnan ,Krishnammal , Padma awards for 141 persons including Krishnammal and S. Ramakrishnan
× RELATED பத்மபூஷண் வேணுமா? சுரேஷ்கோபியை...