சீனாவில் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல்?: கேரளா உள்ளிட்ட 4 மாநிலத்தில் 11 பேரிடம் தீவிர பரிசோதனை

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த வைரஸ் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிலிருந்து திரும்பிய  11 பேருக்கு வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த அவர்களிடம் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் உள்ள சர்வதேச கடல் உணவு சந்தையில் சட்டவிரோதமாக கொண்டு வந்து விற்கப்படும் சுகாதாரமற்ற இறைச்சியிலிருந்து கொரோனா என்ற ஆட்கொல்லி வைரஸ் பரவியது.  மனிதனிடமிருந்து மனிதர்களுக்கு சுவாசம் மூலம் பரவும் இந்த வைரசால், தீவிர காய்ச்சல் ஏற்பட்டு மக்கள் சுருண்டு விழுந்து பலியாகின்றனர்.

ஹூபேய் உள்ளிட்ட 25 மாகாணங்களில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதன் காரணமாக,  ஹூபேயின் 13 நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், காய்ச்சல்  தீவிரமாகி மக்கள் இறந்து வருகின்றனர். நேற்று முன்தினம் வரை பலி எண்ணிக்கை 25 ஆக இருந்த நிலையில் நேற்று 41 ஆக அதிகரித்தது. வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. 1,287 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 237 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம்  தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் 1,965 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேகமாக பரவி வரும் இந்த நோய் அடுத்த மாத இறுதிக்குள் 3 லட்சம் பேருக்கு பரவ வாய்ப்புள்ளதாக சில ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிகர  தகவலை வெளியிட்டுள்ளன. தற்போது இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கி உள்ளது. சீனாவிலிருந்து திரும்பியவர்கள் மூலம் ஹாங்காங், மக்காவ், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்காவில் இந்த நோய் பரவிய நிலையில்,  மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வியட்நாம் நாடுகளிலும் வைரஸ் தொற்று பரவி உள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து சமீபத்தில் 2000 பேர் இங்கிலாந்து திரும்பி உள்ளனர்.

அவர்களை தேடி பிடித்து பரிசோதிக்கும் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசு ஈடுபட்டுள்ளது. இதே போல, இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 11 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர்,  ஐதராபாத், கொச்சி ஆகிய முக்கிய விமான நிலையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, சீனாவில் இருந்து வருபவர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இப்பரிசோதனை மூலம், கேரளாவில் 7 பேருக்கும், மும்பையில் 2 பேருக்கும், பெங்களூரு, ஐதராபாத்தில் தலா ஒருவருக்கும் வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்நோய் இறைச்சியிலிருந்து பரவியதாக கூறப்பட்ட நிலையில், வுகானில் உள்ள ரகசிய  உயிரியல் ஆயுத திட்ட ஆய்வகத்துடன் சம்மந்தம் இருக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் ஆபத்தான வைரஸ்களை ஆய்வு செய்யும் இந்த ஆய்வகம் குறித்து முன்னாள் இஸ்ரேலிய ராணுவ புலனாய்வு அதிகாரி  டேனி ஷோஹோம் கூறுகையில், ‘‘ரகசிய உயிரியல் ஆயுத திட்ட ஆய்வகத்திற்கும் கொரோனா வைரசுக்கும் சம்மந்தம் இருக்கலாம்’’ என கூறி உள்ளார். எனவே, சீனா எதிரி நாடுகளை வீழ்த்த உயிரி ஆயுதம் தயாரிக்கும் முயற்சியினால் இந்த  வைரஸ் மனிதர்களுக்கு பரவியதா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் சம்பளம் ரூ.12,000

இதற்கிடையே, ஹூபேயில் 10 நாளில் 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் 1000 படுக்கை வசதி கொண்ட பிரத்யேக கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான பிரமாண்ட மருத்துவமனையை சீன அரசு கட்டி வருகிறது. இங்கு இரவு பகலாக பணிகள்  படுவேகத்தில் நடந்து வருகிறது. பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.12,000. இது வழக்கமான சம்பளத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகம். கடந்த 2003ல் சார்ஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பீஜிங்கில் கட்டப்பட்ட மருத்துவமனை போன்று  இந்த மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது.

சிகிச்சை அளித்த டாக்டரும் பலி

வுகான் மருத்துவமனை டாக்டர் லியாங் வுடாங்க் (62) கடந்த 9 நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ஓய்வு பெற்றாலும், இக்கட்டான இந்த சமயத்தில் மக்களுக்கு சேவை செய்ய அவர் மீண்டும்  பணிக்கு திரும்பினார். ஓய்வில்லாமல் பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதே போல மற்றொரு டாக்டர், பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.  பொதுவாக கொரோனா வைரஸ் வயதானவர்களையே பாதிப்பதாக கருதப்பட்ட நிலையில் 2 வயது குழந்தைக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: