ஆக்லாந்தில் இன்று 2வது டி20 வெற்றியை தொடர இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?

ஆக்லாந்து: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.20க்கு தொடங்குகிறது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. ஆக்லாந்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்  வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச, நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. கப்தில் 30, மன்றோ 50, கேப்டன் கேன் வில்லியம்சன் 51, ராஸ் டெய்லர் 54* ரன் விளாசினர்.

Advertising
Advertising

இதைத் தொடர்ந்து, கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. கே.எல்.ராகுல் 56, கேப்டன் கோஹ்லி 45, ஷ்ரேயாஸ் அய்யர் 58* ரன் விளாசி வெற்றிக்கு  உதவினர். ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி அதே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் முன்னிலையை அதிகரிக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. அதே சமயம் முதல் போட்டியில்  அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்தும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இரு அணிகளிலுமே அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளதால் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் நியூசிலாந்தை விட இந்திய அணி சற்று பலம் வாய்ந்ததாக இருப்பது கோஹ்லி & கோவுக்கு சாதகமாக இருக்கும். இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், ஷிவம் துபே, முகமது ஷமி,  நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர். நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹமிஷ் பென்னட், டாம் புரூஸ், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், ஸ்காட் குகெலெஜின், டாரில் மிட்செல், கோலின் மன்றோ, மிட்செல் சான்ட்னர், டிம் செய்பெர்ட், ஈஷ் சோதி, டிம்  சவுத்தீ, ராஸ் டெய்லர், பிளேர் டிக்னர்.

Related Stories: