தெலங்கானா பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் தகவல்

ஐதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 120 நகராட்சி, 9 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 22ம் தேதி நடந்தது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 120 நகராட்சிகளில் 108 இடங்களில் ஆளும் தெலங்கானா  ராஷ்டிரிய சமீதி (டிஆர்எஸ்) கட்சி கைப்பற்றியது. காங்கிரஸ் 5 நகராட்சிகளும், பாஜ மூன்று நகராட்சிகளும் இதர கட்சிகள் நான்கு இடங்களை பிடித்துள்ளது.இதேபோன்று 9 மாநகராட்சிகளில் 7 மாநகராட்சிகளில் தெலங்கானா ராஷ்டிரிய சமீதி  கட்சி கைப்பற்றியது.

 இந்நிலையில், தெலங்கானா முதல்வரும், டிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர ராவ் கூறியதாவது: அரசு செய்து வரக்கூடிய திட்டங்களுக்கு பொதுமக்கள் மேலும் பலம் சேர்க்கும் விதமாக இந்த வெற்றியை  வழங்கியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தானை சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை போன்று, தெலங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதுதொடர்பாக  அந்த மாநில முதல்வர்களுடன் நான் பேசி உள்ளேன். இதுதொடர்பாக முதல்வர்கள் மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.

Related Stories: