கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் பேரவையில் தீர்மானம்: பாஜ கடும் எதிர்ப்பு

ஜெய்ப்பூர்: கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜவின் கடும் எதிர்ப்பை மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் முதலில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரிசையில், 3வது மாநிலமாக காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடந்தது.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி  தாரிவால், ‘‘குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. குடியுரிமை வழங்க மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை தடுக்க குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்’’ என்றார். இதற்கு எதிர்ப்பு  தெரிவித்த பாஜ எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கடாரியா, ‘‘குடியுரிமை வழங்கும் விவகாரம் மத்திய அரசு சம்மந்தப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்க்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளதா? யாரையோ திருப்திபடுத்த செய்யும் வாக்கு வங்கி  அரசியலை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்’’ என்றார்.

பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு விண்ணப்பத்தில் பெற்றோர் பிறந்த இடம் உள்ளிட்ட புதிதாக சேர்க்கப்பட்ட கேள்விகளை நீக்கக் கோரியும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

அடுத்ததாக மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நாளை கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: