நிர்பயா வழக்கில் 2 குற்றவாளிகளின் புதிய மனு டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் இரண்டு பேர் திகார் சிறை நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குற்றவாளிகளில் அக்சய் குமார் சிங், பவன் குமார் சிங் ஆகியோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “கருணை மற்றும் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்வதற்கு  போதிய ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் எங்களுக்கு வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த இரண்டு மனுக்களும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சீராய்வு மற்றும் கருணை மனுக்களை தாக்கல் செய்ய உள்ளோம். ஆனால் அதற்கான ஆவணங்களை சிறை நிர்வாகம் வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறது. அதனால் நீதிமன்றம்  இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து காவல் துறை தரப்பு வாதத்தில், “குற்றவாளிகளுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் சரியான நேரத்தில் அவர்களிடம் தரப்பட்டுள்ளன.

ஆனால், தண்டனையை தாமதப்படுத்தும் யுக்திகளை மட்டுமே குற்றவாளிகள்  தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதனால் அவர்களது கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “காவல்துறை வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என்றார். ஏற்கனவே இவ்வழக்கில் வினய் குமார் சர்மா, முகேஷ் குமார் சிங் ஆகியோரின் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

முகேஷ் புதிய மனுதாக்கல்

நிர்பயா கொலை குற்றவாளியான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதியின் நிராகரிப்புக்கு எதிராக முகேஷ்  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

Related Stories: