குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போக்சோ, ஐடி சட்டங்களில் திருத்தம் கொண்டுவர பரிந்துரை: மாநிலங்களவை தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்,  குழந்தை ஆபாச காட்சிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட மாநிலங்களவைக் குழு, 40  பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை வெங்கையா நாயுடுவிடம்  நேற்று சமர்ப்பித்தது.சமூகத்தில்  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பது  கவலையளிப்பதாக இருப்பதால், அதனை தடுக்கவும், ஆய்வு செய்யவும் மாநிலங்களவை  குழுவை, அதன் தலைவர் வெங்கையா நாயுடு நியமித்தார். காங்கிரஸ்  மூத்த தலைவர்  ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான இதில்  பல்வேறு கட்சிகளை  சேர்ந்த 14 எம்பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்நிலையில், இந்த  குழுவானது, 40 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை வெங்கையா நாயுடுவிடம்  நேற்று சமர்ப்பித்தது.

அதில், இந்தியாவில் விற்கப்படும் மொபைல்களில்  அனைத்து வகை செயலிகளையும் கண்காணிப்பது,  குழந்தைகளுக்கு எதிரான பாலியல்  குற்ற தடுப்புச் சட்டம் 2012 (போக்சோ), தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000  (ஐடி)  ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக  ஊடகங்களில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் குழந்தைகள் ஆபாச காட்சிகளை  தொழில்நுட்பம், நிறுவனங்கள், சமூகம், கல்வி ஆகியவற்றின் மூலம் தடுக்க  பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், இதனால்  சமூகத்திற்கும்  குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு  எதிரான ஆபாச காட்சிகள் இணையதளத்தில் தோன்றுவதை தடுக்க இணைய சேவை வழங்கும்  நிறுவனங்களையும் பொறுப்பாக்க வேண்டும். குழந்தைகள் ஆபாச காட்சிகளைப்  பார்ப்பதை தொழில்நுட்ப ரீதியாக தடுக்க,  அவற்றை கண்காணிக்கவும்,  கண்டுபிடிக்கவும், அதனை நீக்கவும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு  அனுமதி அளிக்க வேண்டும். சட்டம்  இயற்றுபவர்களை விட அதனை மீறுபவர்கள் முறைகேடுகள் தெரிந்தவர்களாக  இருப்பதால், இந்த பரிந்துரைகள் ஒருங்கிணைந்த முயற்சியாக அமல்படுத்தப்பட  வேண்டும். இது தவிர, போக்சோ, ஐடி சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு  வரப்பட  வேண்டும். அதற்கேற்ப, இந்திய குற்றவியல் தண்டனையிலும் திருத்தங்கள் கொண்டு  வர வேண்டும்.

இதன்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் எழுத்துப்பூர்வமான அல்லது காட்சிகள் அடிப்படையிலான அல்லது ஒலிநாடாக்கள் மூலம்  அல்லது பாத்திர படைப்பின் மூலம் பாலியல் குற்ற செயலில் ஈடுபட்டால் அதுவும்  போக்சோ சட்டத்தின் கீழ்  கொண்டுவரப்படும். கூடுதலாக, இணையதளத்தில் இவற்றை  பார்ப்போருக்கு வயது தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். குறிப்பாக,  குழந்தைகள் ஆபாச காட்சிகளைப் பார்ப்பதையும், பதிவிறக்கம் செய்வதையும்  தடுக்க வேண்டும். மேலும், குழந்தைகள் பள்ளியில் இருக்கும் போதும்,  பள்ளி வாகனங்களில் வரும் போதும், பள்ளி தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்கும்  போதும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.  

தேசிய இணைய குற்ற அறிக்கைக்கான இணையதளமே, இதன் மின்னணு பிரிவாக  நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு ஆபாச காட்சிகளை பதிவிறக்கம்  செய்யவும், பகிரவும் அனுமதிப்பவர்களுக்கு ஐடி சட்டத்தின் கீழ் கடும் தண்டனை  விதிக்கப்பட வேண்டும்.குழந்தைகளுக்கு எதிரான ஆபாச காட்சிகளை  கொண்டிருக்கும் அனைத்து விதமான இணையதளங்களை முடக்கவும், தடை செய்யவும்  மத்திய அரசின் அமைப்புகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘மன் கி பாத் நிகழ்ச்சியில்  பிரதமர் பேச வேண்டும்’

பரிந்துரையில் மேலும், ‘பிரதமர் மோடி, சமூக  ஊடங்களில் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச காட்சிகளை தடுக்கும் வகையில் உலக  நாடுகளுக்கு இடையே கூட்டமைப்பை ஏற்படுத்துவதுடன் நில்லாமல், இனிவரும்  காலங்களில் தனது `மன்  கி பாத்’ நிகழ்ச்சியில் இது குறித்து பேசவும் அதனை  தடுக்க எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்தும் பேச வேண்டும்,’ என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: