இந்தியா - பிரேசில் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் மெஸ்சியாஸ் போல்சோனரோ, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகள் இடையே  15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இந்தியா-பிரேசில் இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்தது. இரு நாடுகள் இடையே கடந்த 2018-19ம் நிதியாண்டில் ₹58 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்தது. வேளாண் ரசாயனம், செயற்கை நூல், மோட்டார்  வாகன உதிரி பாகங்கள், மருந்து பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ₹27 ஆயிரம் கோடி அளவுக்கு இந்தியா அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்தது. கச்சா எண்ணெய், தங்கம், சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் தாது பொருட்கள் ₹31  ஆயிரம் கோடி அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு, பிரேசில் புதிய அதிபராக, முன்னாள் ராணுவ கேப்டன் ஜெயிர் பொறுப்பேற்றார். இவரை இந்தாண்டு குடியரசு தினவிழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா அழைப்பு விடுத்தது. அதை ஏற்று ஜெயிர்  நேற்று இந்தியா வந்தார். இவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. அவருடன் அவரது மகள் லாரா, மருமகள் லெட்டிசியா, 8 அமைச்சர்கள், 4 எம்.பி.க்கள் மற்றும் தொழிலதிபர் குழுவினர் வந்துள்ளனர். அதிபர் ஜெயிருக்கு ஜனாதிபதி  பவனில், அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன் பின்பு அதிபர் ஜெயிரை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், ‘பிரேசில் அதிபர் ஜெயிரின் இந்திய பயணம், இருதரப்பு உறவில், புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்,’ என குறிப்பிட்டுள்ளார். அதன்பின் பிரதமர் மோடியை, அதிபர் ஜெயிர் சந்தித்து  பேசினார். இதில் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, மருத்துவம், பெட்ரோலியம், தகவல் தொழில்நுட்பம்  மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் அதிகரிப்பது குறித்து  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின், இந்த துறைகள் தொடர்பான 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘இந்தியா-பிரேசில் இடையே உறவுகளை மேலும் விரிவாக்க செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அதிபரின் பயணம், இருதரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பிரேசில் முக்கிய பங்குதாரராக உள்ளது. இரு நாடுகளும் வெகு தொலைவில் இருந்தாலும், சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன,’’ என்றார். பிரேசில் அதிபர் ஜெயிர் கூறுகையில், ‘‘ பல துறைகளில் ஒத்துழைப்பு அளிக்க இரு நாடுகள் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது இந்தியா-பிரேசில் இடையே ஏற்கனவே உள்ள வலுவான உறவை மேலும் பலப்படுத்தும்,’’  என்றார்.

Related Stories: