×

உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்: வீர‌ வணக்கநாள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

மயிலாடுதுறை: உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்மொழி காக்கவும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்தும் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் ஜனவரி 25ம் தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 25ம் தேதி திமுக சார்பில் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது; பள்ளி பருவத்திலேயே தமிழ் கொடியை கையில் ஏந்தி திருவாரூர் வீதிகளில் போராட்டம் ஈடுபட்டார் தலைவர் கலைஞர்.

1938-ம் ஆண்டு 13 தமிழ்கொடியை தாங்கிய தலைவர் கலைஞர் தனது 94 வயது வரை அதனைத் தாங்கிப் பிடித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மயிலாடுதுறையில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட நமது வேட்பாளர் 2,61,315 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளீர்கள். இந்த இரண்டு தேர்தல் வெற்றியும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றியாகும். அந்த வெற்றியை பெற்றேத் தீர்வோம் என மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாளில் உறுதியேற்போம் என கூறினார். மேலும் பேசிய அவர்; பா.ஜ.க ஆட்சி வந்ததில் இருந்து இந்தியை திணிக்கும் முயற்சியை தொடந்து செய்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்கள். இதனை எதிர்த்து தி.மு.க குரல் கொடுத்தது. ஆனால் அ.தி.மு.க வாய்திறக்கவில்லை. இதன்மூலம் தமிழக முதல்வர் பா.ஜ.கவிற்கு பாதம் தாங்குகிறார். அதேபோல் தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சராக இருக்கும் மா.பா.பாண்டியராஜன், ஒரு ஜோக்கர் . அவர் தே.மு.தி.கவில் இருக்கும் போது சட்டமன்றத்தில் பேசும் போது எதோ தகவலோடு பேசுகிறார் என நினைத்திருக்கிறேன். ஆனால் தற்போது அ.தி.மு.கவில் இணைந்து அமைச்சர் ஆனபிறகு எதையாவது பேசி திரிகிறார். அதுமட்டுமின்றி அவர் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சராக இல்லாமல் இந்தி மற்றும் சமஸ்கிருத வளர்ச்சி துறை அமைச்சராக செயல்படுகிறார்.

இந்த ஆட்சியின் முதல்வர் எடப்பாடிக்கு மக்கள் பற்றி எந்த பற்றும் கிடையாது. அவருக்கு இருக்கும் பற்று, பணத்தின் மீதுதான். பணத்திற்காக மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் முதல்வர் எடப்பாடி இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியைக் கொடுப்பதாக பேசுவது வெட்கக்கேடானது. டெல்டா பகுதியை நாசப்படுத்த வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு எடப்பாடி அரசு வெறும் கடிதம் எழுதி மோடி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. மோடி அந்த கடிதத்தைப் படிக்ககூட மாட்டார்.

ஏன் அதனை பிரிக்ககூட மாட்டார். அதனால் தான் மோடி - எடப்பாடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக 27-ம் தேதி தி.மு.க போராட்டம் அறிவித்திருக்கிறோம் என பேசினார்.


Tags : victory ,DMK ,government ,election ,assembly elections ,Stalin ,speech , Local election, DMK, victory, Stalin talk
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்