×

அதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமிக்கு பிப்ரவரி 7 வரை நீதிமன்ற காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு

கோவை: அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியை பிப்ரவரி 7 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கட்சி சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி, சூலூர் போலீசார் இன்று காலை அவரை கைது செய்தனர். அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த கே.சி.பழனிசாமி கடந்த 1989ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காங்கயம் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இருந்த போதிலும் டி.வி. நிகழ்ச்சிகளில் அதிமுக சார்பில் அவர் கலந்து கொண்டார். இது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர் அதிமுக பெயரில் போலி இணைய தளம் நடத்தியதாகவும், கட்சியின் சின்னம் இரட்டை இலையை பயன்படுத்தியதாகவும் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த முத்துக்கவுண்டனூர் ஊராட்சி தலைவர் கந்தசாமி என்பவர் சூலூர் போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்ற கருமத்தம்பட்டி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது தவறான ஆவணத்தை உருவாக்குதல், பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கோவையில் இன்று கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சூலூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியை வரும் பிப்ரவரி 7- ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags : KC Court ,Palanisamy , Former MP KC Palanisamy, Court Guard, Coimbatore Court
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...