சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் வைரஸ் தாக்குதல் ஹாங்காங், மக்காவ், தைவான், நேபாளம், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் தொடர்ந்து சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கிழக்கு சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. 1,287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 237  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கூடுதலாக, மொத்தம் 1,965 சந்தேக வழக்குகளும் பதிவாகியுள்ளன. அறியப்படாத வைரஸ் அழிவை தடுக்க சீன மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை உருவாக்க இணைந்து பணியாற்றி வருகின்றனர். சீனாவின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலும், உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் பாதிப்பை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பதை நிறுத்தி உள்ளது.

இதனிடையே சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடுவதாவது; கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியமற்ற சீனப்பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை புனே மருத்துவத் துறை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே  சீனாவில் இருந்து கேரளா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரில் ஒருவர், ஐதராபாத்தில் ஒருவர் என 11 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: