மேலூர் அருகே மாற்று விவசாயத்தில் இறங்கிய விவசாயிகள்: மலை பிரதேச காய்கறியை பயிரிட்டு அசத்தல்

மேலூர், பெரியாற்று நீரினை மட்டுமே நம்பி உள்ள கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் அதிகளவு நெற்பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த நிலையில் மாற்று பயிராக மலை பிரதேசத்தில் விளையும் பயிரை விளைவித்து சருகுவலையபட்டி விவசாயிகள் அசத்தியுள்ளனர். ஒரு போக ஆயக்கட்டு பகுதியான மேலூர் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது மட்டும் நெல் பயிரிடப்பட்டு வந்தது. இதிலும் மேலூரின் கடைமடையில் உள்ள பல கிராமங்களுக்கு கால்வாய் நீர் முறையாக சென்றடையாமல் அந்த நெல் பயிர்களும் பாதியிலேயே கருகிவிடும் அபாயமும் இருந்தது. இதனால் கால்வாய் நீரை மட்டும் நம்பி இருக்காமல், கிணற்று நீரினை கொண்டு கரும்பு, வாழை போன்ற விவசாயத்தை சிலர் செய்து வந்தனர். அதிலும் கரும்பை தற்போது ஆலைகள் கொள்முதல் செய்வதில்லை என்பதால், அதை பயிர் செய்வதற்கும் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் மஞ்சள் மற்றும் காய்கறிகளை விளைவிக்க ஆர்வம் காட்ட துவங்கினர். சருகுவலையபட்டியில் மஞ்சள் கிழங்கு, கத்திரி, மிளகாய் போன்றவைகளை இதுவரை சில விவாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் மலை மற்றும் குளிர் பிரதேசங்களில் மட்டும் விளையும் முள்ளங்கியை சாகுபடி செய்து நல்ல லாபம் பார்க்க துவங்கியுள்ளனர் சில விவசாயிகள். விவசாயி ஆதப்பன் கூறியதாவது: எந்த ஒரு ரசாயன உரங்களும் போடாமல், முள்ளங்கியை பயிரிட்டு அறுவடை செய்து வெளி மார்க்கெட்டில் நேரடியாக விற்பனை செய்கிறேன். நல்ல ருசியுடன் உள்ளதால் எனது முள்ளங்கி எங்கள் கிராம மக்கள் மட்டுமல்லாது வெளி கிராமத்தினரும் வந்து நேரடியாக வாங்கிச் செல்கின்றனர். இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. என்னை பார்த்து மேலும் பல விவசாயிகளும் முள்ளங்கியை பயிர் செய்ய தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்றார்.

Related Stories: