சாக்கோட்டையில் கத்தரியை தாக்கும் இலைச்சுருட்டல்: விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை

காரைக்குடி,  சாக்கோட்டையில் கத்திரி உள்பட தோட்டக்கலை பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படுவதால் நெற்பயிற்களை தொடர்ந்து இதிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் சுமார் 5000 ஹெக்டேருக்கு விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது. இங்குள்ள பெரியகோட்டை, பெத்தாச்சிகுடியிருப்பு, சிறுகப்பட்டி, மித்ராவயல், புளியங்குடியிருப்பு, முள்ளங்காடு, கல்லாங்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் கத்தரி, மிளகாய், பாகற்காய், பூசணி, வெண்டைக்காய், முள்ளங்கி உள்பட பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

இங்கு விளையும் காய்கறிகள் மதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, கொத்தமங்கலம், தேவகோட்டை, பள்ளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கத்தரியில் வழக்கமாக வரும் நோயை தவிர புதிய வகை நோய் தாக்குதல் உள்ளது. இந்நோய் கண்ட செடிகளின் இலைகள் சுருண்டு விடுகிறது. பின்னர் காய் எதுவும் காய்க்காமல் அப்படியே கருகி விடுகின்றன. பூவும் மேல் நோக்கி சென்று விடுகிறது. இதேபோல் மற்ற காய்களிலும் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ப்பு நேரத்தில் வருவதால் இந்நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கத்தரி பயிர் செய்யப்பட்ட 2வது மாதத்தில் இருந்து தொடர்ந்து 8 மாதங்களுக்கு காய்க்கும்.

ஒரு ஏக்கருக்கு உரம், பூச்சி மருந்து, விதை, உழவுக்கூலி என ஏராளமாக செலவு செய்துள்ளோம். தற்போது பூச்சி அதிகளவில் தாக்கி வருகிறது. கடந்த 2 வருடங்களாக இந்நோய் தாக்குதல் வருகிறது. வாரத்துக்கு 50 கிலோ வரை காய் பறிக்க முடியும். கத்தரியை பொறுத்தவரை வழக்கமாக வரும் நோய்களுக்கு அருகே உள்ள உரக்கடைகளில் நாங்களாக கூறி பூச்சி மருந்து வாங்கி அடித்து கொள்வோம். ஆனால் தற்போது புதிய வகையான இலைசுருட்டல் நோய் தாக்கி வருகிறது. இதற்கு எந்த மருந்து அடித்தாலும் நோய் சரியாகாமல் அப்படியே கருகி வருகிறது. இதனால் பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வேளாண் துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு நோய் தாக்கத்தை தடுக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: