கான்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் ரோந்து செல்ல விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, கான்டூர் கால்வாயில் பட்டப்பகலில் குழாய் மூலம் தண்ணீர் திருட்டு நடக்கிறது. இதனை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிஏபி பாசன தொகுப்பு அணைகளில் கடைசியாக, உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 60 அடி ஆகும். வால்பாறை சோலையாறு அணையில் இருந்து, பரம்பிக்குளம், ஆழியாறு அணையை கடந்து, சர்க்கார்பதி பவர்ஹவுஸ் வழியாக கான்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டுவந்து சேமிக்கப்படுகிறது. கான்டூர் கால்வாயின் மொத்த நீளம் சுமார் 49 கிமீ. ஆகும். பல்வேறு குகைப்பாதைகளை கடந்து சம மட்ட கான்கிரீட் கால்வாயாக இது உள்ளது. திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. முதலாம் மண்டலத்துக்கு நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

அணையின் தற்போது 46 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. கான்டூர் கால்வாய் மூலம் 600 கன அடி நீர்வந்து கொண்டிருக்கிறது. கான்டூர் கால்வாய் நெடுகிலும் ஏராளமான தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள் உள்ளன. சில விவசாயிகள் இரவு நேரங்களில் குழாய் மூலம் தண்ணீரை உறிஞ்சி, தங்கள் கிணற்றில் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்துவார்கள். இதை கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பகலில் ரோந்து செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அதிகாரிகள் ரோந்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, பட்டப்பகலிலேயே கான்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு நடக்கிறது. வல்லக்குண்டாபுரம் பகுதியில் குழாய் போட்டு உறிஞ்சி கிணற்றில் தண்ணீரை விடுகின்றனர். இது சட்டப்படி தவறு என்பதால், அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஏபி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: