சாய ஆலைகளை அத்துமீறல்களை கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டு வாரியம்: விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கவலை

திருப்பூர், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இயங்கி வரும் துணிகளுக்கு சாயமிடும் சாய ஆலைகள், பெரும்பாலும் குளம் ,குட்டை, ஆறு, வாய்க்கால் ஆகியவற்றின் அருகில் அமைந்துள்ளன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் முழுமையாக நீர்வழி ஓடைகளில் விடுகின்றனர். ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் சாக்கடை கழிவு நீரை முழுமையாக நீர் வழி ஓடைகளில் விட்டு நொய்யல் ஆற்றை மாசுப்படுத்தி வருகிறது. இத்துடன் தொழிற்சாலை கழிவு நீரும் கலக்கிறது. நொய்யல் ஆற்றின் மூலம் விவசாயம் செய்த பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்களுக்கு சாய கழிவு நீர் கலந்த தண்ணீரை விட்டனர். கடந்த சில ஆண்டுக்கு முன் திருப்பூர் ஒரத்துபாளையம் அணையில் உள்ள தண்ணீர் தொழிற்சாலை கழிவுகள், சாய கழிவுகளால் நிரம்பி வழிந்தது. அணையை ஆய்வு செய்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் தண்ணீரில்  அமில தன்மை அதிகரித்துள்ளதால் விவசாயத்திற்கு ஏற்றது இல்லை என்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தது. இதைத்தொடர்ந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றிய தொழிற்சாலைகள் அனைத்தம் 2011 ம் ஆண்டு மூடப்பட்டன.  

திருப்பூரில் இயங்கி சாய ஆலைகள் இணைந்து 18 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்து மீண்டும் இயங்க அனுமதி வழங்கியது. விதிமுறை மீறும் ஆலைகளின் மின் இணைப்பு துண்டித்து இயக்கத்தை முழுமையாக நிறுத்தினர். அப்போதைய காலகட்டத்தில் அரசியல்வாதிகள் யாரும் சிபாரிசுக்கு வரவில்லை, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சாய ஆலை உரிமையாளர்களின் கவனிப்புக்கு  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் இரையாகியுள்ளனர்.  இதனால், திருப்பூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக கள ஆய்வு பணிகளுக்கு செல்லாததால் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் சாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களிலிருந்து  சாயக்கழிவு நீரை சாக்கடை கால்வாய், நீர் வழி ஓடைகளில் திறந்து விடுவது அதிகரித்துள்ளதால் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி கூறியதாவது:- இயற்கை காப்பாற்றவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் சீனாவிலுள்ள சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ஆடை தயாரிப்பு நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியது. இதனால் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் துணிகளுக்கு சாயமேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இதனால், மண் வளமும், நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. சாய ஆலைகள், தோல் தொழிற்சாலைகள், பேப்பர் தொழில்சாலைகள் ஆகியவற்றின்  தேவைக்காக கோடிக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. வெளிநாட்டினர் உடுத்தும் ஆடைகளுக்காக தமிழக மண் வளத்தையும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் சாய ஆலைகள், கறித்தொட்டி ஆலைகள், தோல் தொழில்சாலைகள் உட்பட ரசாயன கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்களால் தமிழக மண் வளம், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் நிறுவனங்களை முழுமையாக மூடி இயற்கையை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: