×

கரூர் நகராட்சி திட்டம்! பிளாஸ்டிக் கழிவை மறு சுழற்சி செய்து செங்கற்களாக மாற்றம்: ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு

கரூர், கரூர் நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து செங்கற்களாக மாற்றுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அமைச்சர் கூறுகையில், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய இத்திட்டத்தின் மூலமாக தீர்வு காணலாம். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து செங்கற்களாக மாற்றி பயன்படுத்த முடியும். இந்த திட்டம் நமக்கு நாமே தன்னிறைவுத்திட்டம், மக்கள் பங்களிப்பு தொகை, அரசின் பங்களிப்பு தொகை மூலமாக கரூர் நகராட்சியில் செயல்படுத்தப்பட இருக்கிறது என்றார். கரூர் நகராட்சி ஆணையர் சுதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, பொறியாளர் நக்கீரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் நெடுஞ்செழியன், தங்கராஜ் முன்னிலை வகித்தனர்.

சி மேக் இந்தியா நிறுவனத்தின் டாக்டர் ராமன் சிவகுமார் கூறியது: நகராட்சியில் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. மக்காத குப்பையில் உள்ள 40 சதவீதம் இரும்பு, தகரம், கண்ணாடி போன்ற பொருட்கள் தனியாக பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. மீதம் உள்ள 60 சதவீதம் பல வகையான வடிவங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள். தற்போது சில சிமெண்ட் ஆலைகள் பெற்று வருகின்றன. அந்த ஆலைகளுக்கு இவற்றை சேகரித்து அனுப்ப அதிக செலவாகிறது. எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வினை காண பரீட்சார்த்தமாக ஒரு திட்டத்தை ஈரோடு மாநகராட்சியில் செயல்படுத்தி வெற்றி காணப்பட்டது. இந்த திட்டத்தைத்தான் இப்போது கரூர் நகராட்சியில் செயல்படுத்த இருக்கிறோம். இத்திட்டத்தின்படி,சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் பர்னரில் எரிக்கப்படும்.

வெப்பம் 1000 டிகிரிக்கு குறைவாக இருந்து எரிக்கப்பட்டால் பிளாஸ்டிக்கில் இருந்து டைஆக்சின் வெளியேறும். இதுஒரு நச்சுப்புகை. ஆயிரம் டிகிரிக்கு மேல் வெப்பம் ஏற்றப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும். இதனால் வெளியாகும் கரும்புகை இயந்திரத்தில் ஐந்து முறை தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும். கரும்புகை கடைசியாக வெளியேறும்போது வெண்மை நிறத்தில் வெளியேற்றப்படும். எரிப்பதால் கிடைக்கும் சாம்பலை சேகரித்து அதனுடன் ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட கலவைகளை சேர்த்து பேவர் பிளாக் செங்கல் தயாரிக்கப்படுகிறது. ஒரு டன் குப்பையை எரித்து 18 செங்கற்கள் தயாரிக்கலாம். ஒருசெங்கல் 5 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என்றார்.


Tags : Minister ,Minister's Association , Karur, plastic waste, recycling, bricks,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...