மதுக்கரை-பாலக்காடு ரயில் பாதையில் யானை கண்காணிப்பு பணியில் சிக்கல்

கோவை: கோவை மதுக்கரை-பாலக்காடு ரயில் பாதையில் யானை நடமாட்டம் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில் வனப்பகுதியையொட்டி உள்ள  ரயில் பாதையை  யானைகள் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. போத்தனூரில் இருந்து பாலக்காடு வரை லைன் ‘ஏ’, லைன் ‘பி’ என்ற இரண்டு ரயில் பாதைகள் செல்கிறது. இதில்,  குறிப்பாக மதுக்கரை முதல் எட்டிமடை வரையுள்ள 3 கிலோ மீட்டர் வரையிலான ரயில் பாதையை தான் அதிகளவில் யானைகள் கடக்கிறது. கடந்த 2008ல் மதுக்கரை அருகே நான்கு யானைகள் மற்றும் வயிற்றில் இருந்த குட்டி யானை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், மதுக்கரை ரயில் பாதையை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடக்கும் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து  ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் வாளையாறு, மதுக்கரை, எட்டிமடை உள்ளிட்ட யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதியில் ரயில்கள் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

யானைகள் ரயில் பாதையை அதிகளவில் கடக்கும் இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். மேலும், வனத்துறையினர் சார்பில் ரயில் பாதையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள யானை தடுப்பு காவலர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு என்.பி.ஆர். மூலம் மாதம் ரூ.7,750 சம்பளம் வழங்கப்படுகிறது. யானை தடுப்பு காவலர்கள் இரவு நேரங்களில் 6 பேரும், பகல் நேரத்தில் 3 பேரும் ரயில் பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். புதுப்பதி ரயில்வே கேட் முதல் மாவுத்தம்பதி வரையிலான ரயில் பாதை பகுதியில் ரோந்து பணி மேற்கொள்வார்கள். இது தவிர, வேட்டை தடுப்பு காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் யானை ரயில் பாதையை கடக்காமல் பார்த்து கொள்வார்கள். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக மதுக்கரை-வாளையார் இடையே ரயிலில் அடிபட்டு யானை உயிரிழப்பு சம்பவங்கள் குறைந்தது. தற்போது யானைகள் இடப்பெயர்ச்சி காலம் நடந்து வருகிறது. இதையடுத்து, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாகவும், கூட்டமாகவும் யானைகள் ரயில் பாதையை அதிகளவில் கடந்து வருகிறது. இந்நிலையில், யானை கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் முறையாக ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

9 பேர் பார்த்து கொண்டு இருந்த கண்காணிப்பு பணியில் தற்போது மூன்று பேர் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். மீதமுள்ள 6 பேரை மதுக்கரை ரேஞ்சர் மாற்று பணிக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும்,  அவர்கள் வனப்பகுதியில் ரோந்து பணியை முறையாக மேற்கொள்வதில்லை எனவும், கேரள எல்லைப்பகுதியில் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து வாகனங்களை தணிக்கை செய்து வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவிர, யானை தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை எனவும்  கூறப்படுகிறது. ரயில் பாதையில் யானை கண்காணிப்பு பணிகள் முழுமையாக முடங்கியுள்ளதால், ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், “ரயில் பாதையில் யானை கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. என்.பி.ஆர். மூலம் கிடைக்க வேண்டிய நிதி சரியாக கிடைக்கவில்லை. இருப்பினும், ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. வேட்டைத்தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் இரவு நேர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

Related Stories: