புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறுவது எப்படி?: புதுவை கலெக்டர் விளக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, ஜன.25: புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறுவது குறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி. இது சாம்பல் நிறத்தில் இருக்கும் கண்ணாடி போன்ற மெல்லிய சிறிய இறக்கைகளை கொண்டிருக்கும். இப்பூச்சி நெற்பயிரின் தூர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது. இதன் தாக்குதலால் பயிர் திட்டுத்திட்டாக வட்ட வடிவில் காய தொடங்கி நெற்பயிர் எரிந்து புகைந்து விட்டாற்போல் காணப்படுவதால் இதற்கு புகையான் என பெயர். புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டாரங்களில் பின் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் உரிய மேலாண்மை முறைகளை கடைபிடித்து புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மணிகளில் பால் பிடிப்பதற்கு முன்பு பயிர் காய்ந்துவிடும்.

மணிகள் முற்றாமல் பதராகிவிடும். பயிரின் மேற்பாகத்தில் இதன் அறிகுறி தெரியாது. பயிரின் அடிப்பகுதியில் இருந்து 10 சென்டி மீட்டர் உயரம் வரை இவற்றை காணலாம். வயல்களில் நீர் தேங்கி உள்ள இடங்களில் இதன் தாக்குதல் அதிகமிருக்கும். வானம் மேகமூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக இருக்கும்போது புகையான் பல்கிப் பெருகும். தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை இப்பூச்சியின் எண்ணிக்கை பெருகச் சாதகமாக உள்ளது. மேலும், நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும், வரப்போரங்களில் மரநிழல் இருந்தாலும் புகையான் பெருகிட வாய்ப்பு உள்ளது. முதலில், வயலில் உள்ள நீரை வடித்து 2 நாட்கள் காயவிட்டால் தாக்குதல் குறைய வாய்ப்பு உள்ளது. பின்பு, வயலில் நீர் மறைய நீர் கட்டுவதனால் புகையானின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். புகையானின் தாக்குதல் பொருளாதாரச் சேதநிலைக்கு மேல் இருந்தால் ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மில்லி லிட்டர் அல்லது தையோமெத்தோசம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் அல்லது இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல். 40 மில்லி லிட்டர் இவற்றுள் ஏதேனும் ஒரு மருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பூச்சிமருந்து தெளிக்கும் முன் வயலில் உள்ள நீரை வடித்துவிட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் மேற்கண்ட மருந்துகளை பயன்படுத்தியதற்கான பட்டியல்களை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பின்னேற்பு மானியமாக ஹெக்டேருக்கு ரூ.500 விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்கென ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்து புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தி நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: