×

ஒரு விரல் புரட்சி செய்வோம்: இன்று (ஜன.25) தேசிய வாக்காளர் தினம்

சென்னை: இந்தியாவில் உள்ளாட்சிகள், சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்தலுக்காக மட்டும் பல ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. என்னதான் செலவு செய்தாலும், தொடர் அறிவிப்பு செய்தாலும் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது கனவாகவே உள்ளது. உடல்நிலை, வெளியூர் பயணம், விரக்தி உட்பட பல்வேறு காரணங்களால், பலர் வாக்களிப்பதில்லை. இதற்காக ஏற்படுத்தப்பட்டதே தேசிய வாக்காளர் தினம். இது ஒவ்வொரு ஆண்டும் ஜன.25ம் தேதி கொண்டாடப்படுகிறது. எதற்காக ஜன.25ம் தேதியை தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா? இந்திய தேர்தல் ஆணையம் 1950, ஜன.25ம் தேதி துவங்கப்பட்டது. இதனையடுத்து வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக 2011ம் ஆண்டிலிருந்து, ஜன.25ம் தேதி ‘தேசிய வாக்காளர் தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படுகிறது. 18 வயது நிரம்பிய இந்திய குடிமகன் ஓட்டளிக்க தகுதி பெறுகிறார். ஆனால், 18 வயது நிரம்பிய பலரது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு செய்தும் பலர் ஆர்வமின்றி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை, தேர்தலின் அவசியத்தை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும். இளைஞர்களுக்கு எளிதில் சேர வேண்டும் என்பதற்காகத்தான், ஆன்லைனில் பெயர் சேர்ப்பு, நீக்கம், புகைப்பட அடையாள அட்டை வழங்குதல், வாக்குப்பதிவை ஆன்லைனில் கண்காணிப்பது, விரைவான தேர்தல் முடிவுகள் எனப் பல்வேறு புதுமைகளைப் தேர்தல் ஆணையம் புகுத்தி வருகிறது. தேர்தலின்போது மக்களின் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும், வளரும் சமுதாயத்தினரின் வாக்குரிமைகளை நிறைவேற்ற இருக்கும் எளிய வழிமுறைகள் எவை, ஐந்தாண்டு காலம் நம்மை ஆளக்கூடிய அரசியல் ஆளுமையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது போன்ற பல கேள்விகளுக்கு உரிய பதிலை தேடிச் செல்வதன் அடையாளத் தேதியாகவே ஜனவரி 25 விளங்குகிறது. ஒரு வாக்காளர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி, குற்ற வழக்குகள், சொத்துகள், தேர்தல் அறிக்கைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.

பணம் கொடுத்து தனக்கு வாக்கு அளிக்கும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது வேறு ஒருவருக்கு வாக்கு அளிக்கக் கூடாது எனக் கட்டளையிடவோ இந்திய ஜனநாயகத்தில் இடமே இல்லை. தன் தொகுதியில், மாநிலத்தில், நாட்டில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவரால் ஏற்படக்கூடிய பலன் என்ன? போன்றவற்றை சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. அது மட்டுமல்ல... ஒவ்வொருவரும் தங்களது வாக்கை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். விருப்பமில்லை என்றால் கூட, ‘நோட்டா’ பட்டனை தட்டலாம். உங்களுக்கான வாக்கை நீங்கள் எப்படியாவது செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதை வேறு யாரேனும் முறைகேடுகளால் போட்டு விடக்கூடும். தேர்தல் நேரங்களில் உடல்நிலையை கூட கருதாமல், சிரமப்பட்டாவது வாக்களிக்கும் முதியவர்களை பார்த்திருப்பீர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல தேர்தல்களில், சுமார் 10 சதவீத இளைஞர்கள் வாக்களிக்கவில்லை என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 6 சதவீதம் பேருக்கு அதுதான் முதல் வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஆட்காட்டி விரலில் வைக்கும் மையால், விரலில் கறை படியலாம். ஆனால், நீங்கள் வாக்களிக்கும் நபர் கறை படியாதவராக இருக்க வேண்டும். படிப்பு, வசதி பார்ப்பதை விட, தங்களது தொகுதி, மாவட்டம், மாநிலம், நாட்டுக்கு அவர் எந்தளவுக்கு சேவை செய்வார் என்பதைத்தான் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும். எனவே, ஒரு விரல் புரட்சி செய்வோம். ஜனநாயக கடமையை நிறைவேற்று வோம்.

Tags : Voter , One Finger Revolution, Today is National Voter Day
× RELATED வலங்கைமான் பள்ளிவாசலில்...