டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை

டெல்லி:  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து களமிறங்கியிருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரசு ஆகிய கட்சிகளுக்கிடையே தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. 3 கட்சிகளும் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லியில் தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்களும் இங்கு வசித்து வருகின்றனர். அவர்களின் வாக்கும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது. குறிப்பாக அங்கு வசிக்கும் 12 லட்சம் தமிழர்களில் 4 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

எனவே அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது ஆம் ஆத்மி.  தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவு டெல்லியில் தங்கி படித்து வருவதால் டெல்லிவாழ் மாணவர்கள் இடஒதுக்கீடு  பாதிக்கப்படுவதாக ஒருசமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது தமிழர்களிடையே பெரும் அதிர்ப்பதியை ஏற்படுத்திருந்தது. அதைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார். இதனால் தமிழர்களும் சற்று சமாதானம் அடைந்திருந்தனர்.  எனவே தமிழர்களின்  மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.  

மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை முழுமையாக வழங்குவதாகவும்  பரப்புரையின் போது உறுதியளித்து வருகிறார். பாரதிய ஜனதா, காங்கிரசு போன்ற தேசிய கட்சிகள் தங்களை கண்டுகொள்ளாத நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு, மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர் டெல்லி வாழ் மக்கள். வடகிழக்கு டெல்லியை சேர்ந்த கவுன்சிலர் ராஜாவும் ஆம் ஆத்மிக்கு தங்களது வாக்குகளை செலுத்த தமிழர்கள் முடிவு செய்திருப்பதாக கூறுகிறார். தமிழர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தாலும், 70 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வேட்பாளர் நிறுத்தப்படாதது தமிழர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது. இதனால் தமிழர்களின் வாக்குகள் ஆம் ஆத்மிக்கு முழுமையாக சென்று சேருமா?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories: