குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு இடைத்தரகர் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை:  குரூப்-4 முறைகேடு தொடர்பாக நேற்றிலிருந்து விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நேற்று 2 தாசில்தார்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். அதுமட்டுமல்லாது தேர்வு எழுதிய 12 பேர் சிபிசிஐடி அலுவலகத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுவந்தது. குறிப்பாக இடைத்தரகர்கள் 3 பேரை அதிரடியாக போலீசார் நேற்று கைது செய்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். அதில் முதலாவதாக ரமேஷ் என்பவர் பள்ளிக்கல்வித்துறையில் வேலை பார்ப்பவர், இரண்டாவது ரித்திஷ் என்பவர் இந்த தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றவர், மேலும் மூன்றாவதாக திருக்குமரன் என்பவர், ஏற்கனவே எரிசக்தி துறையில் முறைகேடு செய்து 2018ல் தேர்வு எழுதி பணியில் அமர்ந்தவர், ஆகிய 3 பேரும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது.

இந்த விவகாரத்தின் மூலம் டிஎன்பிஎஸ்சியில் இந்த முறைகேடு என்பது, இந்த தேர்வில் மட்டுமல்லாது 2017,2018, 2019 ஆகிய தேர்வுகளிலும் நடந்திருக்கலாம் என்று சிபிசிஐடி போலீசாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே அதுத்தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்தான் நேற்று 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கடலூரில் இருப்பது தெரியவந்ததையடுத்து அவரையும்  நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். தற்பொழுது அவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த இடைத்தரகர்களுக்கு உதவிய  டிஎன்பிஎஸ்சி அதிகாரி யார்? என்பதுதான் தற்பொழுது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அரசு அதிகாரிகள் பலரும் தவறு செய்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அந்த அரசு அதிகாரிகளை கண்டுபிடிப்பதற்கு தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் தேர்வு எழுதும் 9 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 வாட்டாச்சியரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: