×

தடை செய்யப்பட்ட சமூக வளைதளங்கள் முடக்கம் தொடர்கிறது: 5 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடக்கம்!


காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட இணையதள சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 2ஜி இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கம் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்து வதந்திகள் பரவுவதை தடுக்க இணைய சேவைகள், சமூக வலைத்தளங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் அங்குள்ள சூழ்நிலையை தொடர்ந்து, ஸ்ரீநகர் உட்பட ஜம்முவின் ராம்பன், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களில் இணையதள சேவை மீண்டும் தொடங்கியது. இருந்தாலும் லடாக் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் இணையதள சேவை முடக்கம் தொடர்ந்து வந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், தற்போது மீண்டும் பல பகுதிகளில் இணையதள சேவைகள் உயிர்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 150 நாட்களுக்கு பிறகு காஷ்மீர் முழுவதும் 2ஜி இணையத்தள சேவை மீண்டும் தொடங்கியது.  இன்று முதல் அவை சில கட்டுப்பாட்டுகளுடன் மீண்டும் இயங்க தொடங்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த இணைய சேவைகள் மூலம் 301 வலைத்தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்திற்கு 2ஜி வேகம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக இன்று முதல் இம்மாத இறுதி வரை கட்டுபாட்டுகளுடன் கூடிய இணையசேவை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வெள்ளை பட்டியலில் உள்ள இணையதளங்களின் தேவையை பயன்படுத்தலாம் என்றும், முகநூல், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களுக்கான தடை நீடிக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kashmir , Prohibition, Social Networking, Freeze, Kashmir, 2G Internet Service, Start
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...