சென்னையில் பெண்களுக்காக பெண்களே இயக்கும் ‘பிங்க் ஆட்டோ திட்டம்’ அறிமுகம்

சென்னை:  பெண்களுக்காக பெண்களே இயக்குவதுதான்  ‘பிங்க் ஆட்டோ திட்டம் . பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் தங்களின் வாழ்வில் சுயத்தொழில் மூலம் முன்னேற இந்த  ‘பிங்க் ஆட்டோ திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கம் சாா்பில் பிங்க் ஆட்டோ எனும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய 200 பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு 5 மாதகாலமாக ஓட்டுநா் பயிற்சி வழங்கப்பட்டது. இதையடுத்து அவா்களுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில்  நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஏடிஜிபி ரவி,  அவா்களுக்கு ஓட்டுநா் உரிமத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது, பணியிடங்களிலும் சரி; குடும்ப வாழ்க்கையிலும் சரி, பெண்கள் பல்வேறு பிரச்னைகளைக் கடந்தே வாழ வேண்டியிருக்கிறது.  

பெரும்பாலும் கணவர்களாலேயே பல பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகின்றனா். அதிலும், மது போதையில் வரும் சில ஆண்கள், தங்களது மனைவிகளை துன்புறுத்துவதும், அடிப்பதும் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.  இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இத்தகைய அவல நிலையிலிருந்து அவா்கள் மீண்டு வர சுய வேலைவாய்ப்பு ஒன்றே தீா்வாக இருக்கும். குறிப்பாக, தங்களது குழந்தைளுக்கு கல்வியறிவு அளிப்பதற்கும், குடும்பத்தை முறையாக நடத்துவதற்கும் பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு அவசியம்.  அந்த வகையில், 200 பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சியளித்து வேலைவாய்ப்புக்கு வழி வகை செய்துள்ள ரோட்டரி சங்கத்தின் பணி பாராட்டத்தக்கது என்றார் அவா். மேலும் பயிற்சி பெற்ற பெண்கள், இத்திட்டமானது தங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். பெண்களுக்காக  ஆட்டோக்களை இயக்க தயாராக உள்ள இவர்கள் சமூகத்தில் புது நம்பிக்கையை விதைப்பார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.

Related Stories: