தமிழகத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிரை தாக்கும் லட்சுமி வைரஸ்: விவசாயிகள் அதிர்ச்சி

கடலூர்:  தமிழகத்தில் சம்பா அறுவடை நடந்து வரும் கடலூர் மாவட்டத்தில் தான் நெற்பயிரில் வைரஸ் நோய் பரவி விவசாயிகளை கவலையடைய செய்திருக்கிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட மீதிக்குடி, கோவிலாம்பூண்டி, நார்க்கறவன்குடி, முத்தழப்பாடி, பின்னலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செழித்து வளர்ந்திருந்தது.  இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் பொங்கல் திருவிழாவை தங்கள் நெல் வயல்களில் கொண்டாடினர். இந்நிலையில் மீதிக்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் வயலில் முற்றிய நிலையில் காணப்பட்ட நெற்பயிர்கள் பின்னர் மஞ்சள் நிற கட்டிகள்போல் காணப்பட்டது. வயலில் பாதியளவிற்கு இதேபோல் காணப்பட்டநிலையில் மறுநாள் நெற்பயிர்கள் கருப்பு நிறமாக மாறியதை  கண்டு அந்த விவசாயி பெரும் அதிர்ச்சியடைந்தார்.  

இதுபோன்று ஒருவயலில் அல்ல சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வயல்களிலும் பரவி பயிர்களை பதர்களாக்கி வருகிறது. இந்த முறை நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில் தற்பொழுது பயிர்களை பூச்சிகள் தாக்கியதால், இப்போது அவை நாசமாகின. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை  எப்படி கட்ட போகிறோம்  என்ற வேதனையில் தவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் தாங்கள் இது போன்ற பூச்சி தாக்குதலை இதுவரை கண்டதில்லை என கூறுகின்றனர். மேலும் இதனை தடுக்க மருந்து கடைகளுக்கு சென்று பயிரின் நிலைமையை குறி மருந்துகளை வாங்கி கொண்டுவந்து இதுவரை 3 முறை தெளித்தும் பயனிலை என அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.  

இந்த பயிர்களை பரிசோதித்த வேளாண் அதிகாரிகளோ இது லட்சுமி வைரஸ் என்ற வகையை சார்ந்த கிருமியின் தாக்குதலால் பயிறுகளில் ஏற்படும் நோயாகும் என்றும் அதிக மகசூல் உள்ள வயல்களில் நெற்கதிர்களில் இந்த நோய் மின்னல் வேகத்தில் காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை எப்படி கட்டப்போகிறோம் என தெரியவில்லை.  ஆகையால் அரசு தங்களுக்கு வங்கி கடனை  தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பின்னர் காப்பீடுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Rice ,Virus Attacking , Tamil Nadu, Harvest, Paddy, Lakshmi Virus, Farmers, Shock
× RELATED ஆள் பற்றாக்குறையால் காலம் முடிந்தும்...