×

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதிவிடுபவர்களின் பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும்: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளை பதிவு செய்பவர்களின் பட்டியலை தமிழகம் முழுவதும் சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளைப் போட்டு அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மேலும், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியலமைப்பு பதவி வகிப்பவர்கள் குறித்தும், அவர்களது குடும்பத்தினர் குறித்தும் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகளை வெளியிட்டு பதிவு செய்தவர்களின் பட்டியலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை திருப்தி இல்லை என்று தெரிவித்த நீதிபதி, இதுபோல் அவதூறாகவும் ஆபாசமாகவும் கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக என்ன மாதிரியான நடைமுறை வைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். தமிழகம் முழுவதும் இதுபோல் கருத்துகளை பதிவு செய்பவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் இதுபோன்ற கருத்துகளை இனிமேல் சமூக வலைதளங்களில் பதிவிட மாட்டேன் என்று உத்தரவாதத்தை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags : High Court , Social Website, Pornography, Poster, List Filed, DGP, High Court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...