×

நாளை 71வது குடியரசு தின கொண்டாட்டம் மெரினாவில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றுகிறார்: வீரதீர செயலுக்கான அண்ணா விருது முதல்வர் வழங்குகிறார்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி நாளை காலை 8 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார். வீர தீர செயலுக்கான அண்ணா விருதை முதல்வர் எடப்பாடி வழங்குகிறார். நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் நாளை (26ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், காமராஜர் சாலையில் கடற்கரை அருகேயுள்ள காந்தி சிலை அருகே நாளை காலை 8 மணிக்கு தேசிய கொடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து, தேசியக்கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து காலை 8.02 மணி முதல் விமானப்படை, கப்பல் படை, தரைப்படை வீரர்கள், ஆண் மற்றும் பெண் போலீசார், கமாண்டோ போலீசார், தீயணைப்பு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், என்சிசி மாணவர்கள் உள்ளிட்ட 48 படை பிரிவினரின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும். வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் தனி மேடையில் நின்று ஏற்றுக்கொள்வார். அணிவகுப்பு முடிவடைந்ததும், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார். அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது மற்றும் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை சிறந்த விவசாயிக்கு முதல்வர் எடப்பாடி வழங்குவார்.

அதைதொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். கலை நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், தமிழக அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்பு துறை, காவல் துறை, வேளாண்மை துறை, பள்ளி கல்வி துறை, சுற்றுலாத்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, கைத்தறி துறை உள்பட 25 துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அணிவகுப்பு மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி முடிவடையும். தொடர்ந்து கவர்னர் மற்றும் முதல்வர் விழா மேடையில் இருந்து விடைபெற்று செல்வார்கள். குடியரசு தின விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

* 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு
குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விமான நிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் போலீசார் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

Tags : Governor ,Republic Day Celebration , Tomorrow, 71st, Republic Day, Marina, Governor, National Flag, Heroic Action, Anna Award, CM
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...