தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு தீர்மானம்

சென்னை: பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் துரைமாணிக்கம், பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள மாநில கட்சி அலுவலகத்தில் நடந்தது. பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசிய செயலாளர் அமர்ஜித் கௌர், மூத்த தலைவர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணை செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு வலிமையான அழுத்தம் தந்து அவர்களது விடுதலையை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை கைதிகளாக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வருகிற இஸ்லாமியர்கள், தலித்துகள் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதி உட்பட கடலோர மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2016ன்படி முதல் நிலையில் இருந்ததை 3ம் நிலைக்கு மாற்றி பொதுமக்கள் கருத்துக் கேட்பது, நிலவுடமையாளர்களிடம் அனுமதி பெறுவது, சூழலியல் சமூகத் தாக்க மதிப்பீடு செய்வது போன்ற நிபந்தனைகளிலிருந்து விதிவிலக்கு அளித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி அளித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Related Stories: