ஆந்திர கல்லூரியில் எல்.எல்.பி. படித்த விவகாரம் 1000 பேர் பட்டியல் சேகரிக்கும் பணி தொடக்கம்: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சென்னை: பணம் கொடுத்து ஆந்திராவில் உள்ள தனியார் சட்ட கல்லூரியில் பட்டம் பெற்ற 1000 பேரின் பட்டியல் சேகரிக்கும் பணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடங்கி உள்ளனர். சென்னை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க (பார் கவுன்சில்) செயலாளர் ராஜாகுமார் அளித்த புகாரின்படி, தெற்கு ரயில்வேயில் கார்டாக பணியாற்றி வந்த விபின் என்பவர் பணியில் இருக்கும் போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள எஸ்.பி.டி.ஆர்.எம். தனியார் சட்ட கல்லூரியில் கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்பு படித்ததாக போலி ஆவணம் கொடுத்து பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய முயன்ற விபின் மற்றும் மோசடிக்கு உதவிய வழக்கறிஞர்களான உலகநாதன் மற்றும் மோகன்தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள எல்பிடிஆர்எம் தனியார் சட்ட கல்லூரி முதல்வர் ஹிமவந்த் குமார் ஒவ்வொரு ஆண்டும் முகவர்கள் மூலம் 300 பேர் தங்களது கல்லூரியில் 80 சதவீதம் நாட்கள் கல்லூரிக்கு வந்து எல்எல்பி படித்ததாக சான்று கொடுத்து பட்டம் வழங்கி வந்தது தெரியவந்தது. இதுபோல் கடந்த மூன்று ஆண்டுகளில் பணத்திற்கு ஆசைப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக சம்பந்தப்பட்ட தனியார் சட்ட கல்லூரி மூலம் ஆயிரம் பேருக்கு எல்எல்பி படித்ததற்கான சான்று வழங்கப்பட்டது தெரியவந்தது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கவுதமன் தலைமையிலான போலீசார் அதிரடியாக ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, போலி ஆவணங்கள் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கல்லூரியில் படிக்காமல் சட்டம் படித்ததற்கான சான்று வழங்கியது தெரியவந்தது. உடனே மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கவுதமன் தலைமையிலான தனிப்படை முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் சட்ட கல்லூரி முதல்வர் ஹிமவந்த் குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் அடுத்தகட்டமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார், புகார் எழுந்த ஆந்திர தனியார் சட்ட கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக படிக்காமல் இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து சட்டம் படித்ததாக பட்டம் பெற்ற 1000 பேர் யார் யார், அவர்கள் பின்னணி என்ன என்பது குறித்து கல்லூரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை தொடங்கி உள்ளனர். இந்த பணி முடிந்தவுடன், மோசடி பட்டியலில் உள்ள நபர்கள் யாரேனும் வழக்கறிஞர்களாக பார் கவுன்சிலில் பதிவு செய்து இருந்தால் அவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

* பத்திரிகையாளர்களும் உடந்தை

கடப்பா சட்டக்கல்லூரியில் எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் தங்கள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டே, படித்ததாக சான்றிதழ் பெற்றிருப்பதும், பலர் தற்போதும் படித்துக் கொண்டிருப்பதாக கணக்கு காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories: