×

சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு நடிகர் சங்க தேர்தல் ரத்து: 3 மாதத்தில் தேர்தல் நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலை ரத்து செய்த உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் 3 மாதங்களுக்குள் புதிதாக தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை திட்டமிட்டப்படி நடத்தவேண்டும். ஆனால், பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டது. அதன்அடிப்படையில் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடந்தது.

இதற்கிடையே தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் பெஞ்சமின் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சங்கத்தை நிர்வகிக்க உரிய நிர்வாகிகள் இல்லை என்பதால், நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிப்பதற்கு பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை தமிழக அரசு நியமித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் நாசர், கார்த்தி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன், நடிகர் சங்கம் சார்பில் மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ், வக்கீல் கிருஷ்ணா உள்ளிட்டோரும், மனுதாரர் ஏழுமலை சார்பில் வக்கீல் எஸ்.எஸ்.ராஜேஷ், பெஞ்சமின் சார்பில் எஸ்.பாலாஜி, ஜெயமணி சார்பில் சுப்புராஜ் உள்ளிட்டோரும் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு விவரம் வருமாறு:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். இந்த பதவிக்காலம் கடந்த 2018 அக்டோபர் 18ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு சங்கம் பொதுக்குழுவை கூட்டி சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக மேலும் 6 மாதங்கள் பதவிக்காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கை சங்கத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என்று உறுப்பினர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. சங்கத்தின் பொதுக்குழுவின் முடிவின்படி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு சங்கத்தின் தேர்தல் 2019 ஜூன் 23ம் தேதி ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்த அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நாளுக்கு ஒரு நாளைக்கு முன்பு தேர்தல் நடத்தும் இடம் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எப்பாஸ் பள்ளிக்கு மாற்றப்பட்டது. இதுபோன்ற நடைமுறைகள் விதிகளுக்கு முரணானது என்றும் அதனால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தேர்தலை நடத்தலாம், வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது.

 பதவிக்காலம் முடிந்தபிறகு தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் பதவி முடிந்த நிர்வாகிகளுக்கு இல்லை என்று மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. சங்கத்தை நிர்வகிப்பதற்காக உரிய நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் வாதிட்டுள்ளார். அனைத்து தரப்பு வாதங்களையும் ஆய்ந்து பார்க்கும்போது, பதவிக்காலம் முடிந்த நிலையில் சங்கத்தின் தேர்தலை பதவி முடிந்த நிர்வாகிகள் நடத்த முடியாது. எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. சங்கத்தின் தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர் சங்கத்திற்கு புதிதாக தேர்தலை நடத்த வேண்டும். புதிய வாக்காளர்கள் பட்டியலை அவர் தயாரித்து அவற்றை பரிசீலித்து இறுதி பட்டியலை வெளியிட வேண்டும்.

அதன்பிறகு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிக்கு உறுப்பினர்களும், தமிழக அரசும் ஒத்துழைப்பு தரவேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்கும்வரை சங்கத்தின் தனி அதிகாரி தனது பணியில் இருப்பார். தேர்தல் நடைமுறைகள் அனைத்தையும் தேர்தல் அதிகாரி 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிந்த நிலையில் சங்கத்தின் தேர்தலை பதவி முடிந்த நிர்வாகிகள் நடத்த முடியாது.

* மேல்முறையீடு
நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மீண்டும் தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஷால் அணியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி இதுதொடர்பாக முடிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.


Tags : Actor ,Madras High Court Announces Action for Actor's Association Chennai High Court ,elections ,judge ,election commission , Chennai High Court, Action verdict, Actor's election, cancellation
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...