பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தர திட்ட செலவுக்கு அரசு சார்பு நிறுவனங்களிடம் 1.96 லட்சம் கோடி கடன் வாங்குகிறது அரசு

புதுடெல்லி: வரும் 2020-21ம் நிதியாண்டில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், திட்டங்களுக்கு செலவிட ஒதுக்கீடு செய்யும் நிதியை அரசு சார்பு நிறுவனங்களிடம் இருந்து கடனாகப் பெற்று சமாளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, சுமார் 28 பில்லியன் டாலர் (ரூ.1.96 லட்சம் கோடி) கடனாகப் பெறுகிறது. இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்புடைய அரசு வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்தன. மந்தநிலையில் உள்ள பொருளாதாரத்தை வளர்ச்சி பெறச் செய்வதற்காகவும், வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கவும் இந்த முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை கடந்த பல ஆண்டுகளாகவே மந்தநிலையில் நீடிக்கிறது. குறிப்பாக கடந்த 6 காலாண்டில் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. மீள்வதற்கான வாய்ப்பே இல்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. அதேவேளையில் இந்த நிலையில் இருந்து மீளும் அடிப்படை கட்டமைப்பு நமது நாட்டில் உள்ளது என்று பிரதமர் மோடி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

ஆனால், தொடர்ந்து மந்தநிலையில் நீடிக்கும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிராமப்புற நலத் திட்டங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு அதிக அளவில் நிதி செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசு தனது நிதி பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். அதற்காக அரசு சார்பு நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று தனது நலத் திட்டங்களுக்கு செலவிட உள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுமாதிரி கடன் வாங்க உத்தேச மதிப்பீடு 1.75 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இதைவிட கூடுதலாக 13.8 சதவீதம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரூ.1.96 லட்சம் கோடி கடன் திரட்ட பரிசீலனை செய்து வருகிறது.

நாட்டின் பொருளாதாரம் தேக்கநிலையில் இருந்து மந்தநிலையில் நீடிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தபோது, அரசு ஆரம்பத்தில் மறுத்தது. கருத்து எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தது. அதன் பின்னர், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அதற்கு முன்பு அது பற்றிய விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்பதால் இது தொடர்பாக எதையும் தெரிவிக்க மத்திய நிதித்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

கடும் பொருளாதார நெருக்கடி:

“நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். நுகர்வோர் தேவை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றால் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் நலத் திட்டங்களுக்கு செலவிடும் நிதியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடே கிடையாது.” என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உண்மை எது?

உண்மையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஜிடிபியில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 4.5 சதவீதத்தைத் எட்டியுள்ளது என்று சொன்னால் ஆச்சரியபம் அடையப்போவது இல்லை. ஏனெனில் அதிகாரப்பூர்வ பற்றாக்குறை ஜிடிபியில் 3.5 சதவீதத்திற்கும் 4 சதவீதத்திற்கும் இடையில் தான் உள்ளது.

Related Stories: