கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அதிரடி அரை சதம்: முதல் டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது இந்தியா: 1-0 என முன்னிலை பெற்றது

ஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். நியூசிலாந்து தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில், கோலின் மன்றோ களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 80 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். கப்தில் 30 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துபே பந்துவீச்சில் ரோகித் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, நியூசி. ஸ்கோர் எகிறியது.

அரை சதம் அடித்த மன்றோ 59 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து தாகூர் வேகத்தில் சாஹல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிராண்ட் ஹோம் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, நியூசி. அணி 117 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சற்று பின்னடைவை சந்தித்தது. எனினும், வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி இந்திய பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 28 பந்தில் 61 ரன் சேர்த்து மிரட்டினர். வில்லியம்சன் 51 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் கோஹ்லி வசம் பிடிபட்டார். செய்பெர்ட் 1 ரன்னில் வெளியேற, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. டெய்லர் 54 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), சான்ட்னர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா, தாகூர், சாஹல், துபே, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித், ராகுல் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 7 ரன் எடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் டெய்லர் வசம் பிடிபட, இந்திய அணிக்கு அதிர்ச்சித் தொடக்கமாக அமைந்தது. எனினும், ராகுல் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 99 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. ராகுல் 56 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கோஹ்லி 45 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 13 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா 13.2 ஓவரில் 142 ரன்னுக்கு 4வது விக்கெட்டை இழந்தது. ஆட்டம் நியூசி.க்கு சாதகமாகத் திரும்பினாலும், ஷ்ரேயாஸ் அய்யர் - மணிஷ் பாண்டே ஜோடி மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது.

அபாரமாக விளையாடிய ஷ்ரேயாஸ் 26 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்தியா 19 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஷ்ரேயாஸ் 58 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), மணிஷ் பாண்டே 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் சோதி 2, சான்ட்னர், டிக்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஷ்ரேயாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் நாளை பிற்பகல் 12.20க்கு தொடங்குகிறது.

Tags : T20 match ,KL Rahul ,India ,Shreyas Action Half ,New Zealand , KL Rahul, Shreyas, First T20 match, New Zealand team, India
× RELATED நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம்