வாலிபருடன் சினிமாவுக்கு சென்றதை மறைக்க பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய சிறுமி: விசாரணையில் அம்பலம்

திருமலை: தெலங்கானாவில் வாலிபருடன் சினிமாவுக்கு சென்றதை மறைப்பதற்காக காரில் கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், அமீன்பூர் நகராட்சிக்குட்பட்ட வாணி நகரில் வசித்து காவலாளியாக பணிபுரிந்து வருபவரின் மகள் 16 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.  அப்போது மர்ம நபர்கள் 3 பேர் அந்த சிறுமியை காரில் கடத்திச்சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் வந்தது.  இதையடுத்து அமீன்பூர் போலீசாருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு, விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அப்போது, அந்த சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அந்த சிறுமி வாலிபர் ஒருவருடன் தானாக வந்து பைக்கில் ஏறி சென்றதும் சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்த்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.  இதையடுத்து அந்த சிறுமியிடம் நடந்த விவரங்களை சிசிடிவி கேமரா காட்சிகளை காண்பித்து கேட்டபோது, தனது நண்பருடன் சினிமாவுக்கு செல்வதை பெற்றோர் தெரிந்து கொண்டால் அடிப்பார்கள் என்பதால் காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடினேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஏற்பட்ட பரபரப்பால் போலீசார் இந்த வழக்கை சவாலாக எடுத்துக்கொண்டு விசாரணை செய்த நிலையில்  சிறுமியின் நாடகம் அம்பலமானது.  இதையடுத்து போலீசார் சிறுமியை சினிமாவுக்கு அழைத்து சென்றதற்காக அவரது நண்பர் சந்தீப் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.


Tags : Little Girl Who Covered Up With Youth In Cinema: Trial at Expose , Cinema, rapist, little girl
× RELATED டெல்லியில் மீண்டும் வன்முறை...