பல்லாவரம் அருகே மது போதையில் மாநகர பஸ்சை இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு

 * எதிரே வந்த வாகனங்களின் மீது மோதி விபத்து

˜ * பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே மது போதையில் மாநகர பஸ்சை இயக்கிய ஓட்டுனரை பிடித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பல்லாவரம் அடுத்த அனகாபுதூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு  தடம் எண்.60 என்ற மாநகர பஸ் ஒன்று பிராட்வே நோக்கி புறப்பட்டது. அனகாபுத்தூரை சேர்ந்த ஜோதிலிங்கம் (45) என்பவர் பஸ்சை ஓட்டினார்.  பஸ் புறப்பட்ட சில நிமிடங்களில் சாலையில் தாறுமாறாக சென்று, எதிரே வந்த ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்களை இடித்துத் தள்ளியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்களும், அவ்வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகளும் உடனடியாக தங்களது வாகனங்களில் விரட்டிச் சென்று மாநகர பஸ்சை மடக்கி நிறுத்தினர். அப்போது, ஓட்டுனர் ஜோதிலிங்கம் நிதானம் இல்லாமல் மது போதையில் பஸ்சை இயக்கியது தெரியவந்தது. மேலும், தட்டிக்கேட்ட பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டியபடி, தொடர்ந்து பஸ்சை இயக்க முயன்றார்.  

இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் மது போதையில் இருந்த பஸ் ஓட்டுனர் ஜோதிலிங்கத்தை பொதுமக்களிடம் இருந்து மீட்ட போலீசார் அவரை, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைப்பதாக  பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். அதனையேற்று பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். போதை ஓட்டுநரின் இந்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் பொதுமக்கள் தப்பினர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது போன்ற போதை ஓட்டுநர்கள் மீது மாநகர கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எம்டிசி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்றொரு சம்பவம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவரது மகன் சரவணன் (18), காட்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த 16ம் தேதி பொங்கல் விடுமுறைக்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். மறுநாள் இரவு பெட்ரோல் வாங்க, தனது உறவினர் மகன் தர்ஷன்குமார் (14) என்பவனுடன் கோயம்பேடுக்கு பைக்கில் சென்றார். கோயம்பேடு, காளியம்மன் கோயில் சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற அரசு பேருந்து மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தர்ஷன்குமார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரவணன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

Related Stories: