×

மது அருந்த பணம் கேட்டு தொல்லை செய்ததால் கட்டையால் அடித்து தம்பி கொலை: அண்ணன் கைது

கீழ்ப்பாக்கம்: மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், தம்பியை உருட்டுக் கட்டையால் அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். கீழ்ப்பாக்கம், புல்லாபுரம், 5வது தெருவை சேர்ந்தவர் கொண்டையா (50). இவரது மனைவி கொண்டம்மா (46). இவர்களது மகன்கள் கிரிபாபு (25), முரளி (எ) ரஜினிமுருகன். கிரிபாபு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். முரளி கூலிவேலை செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். நீண்ட காலமாக முரளி தன்னிடம் பணம் இல்லாதபோது, மது குடிப்பதற்கு தனது தாயிடமும், அண்ணன் கிரிபாபுவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம், புல்லாபுரம் முதல் தெருவை சேர்ந்த பரிமளா (21) என்பவரை முரளி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான பிறகும் முரளி தினமும் மது குடித்துவிட்டு வந்ததால், அவரது மனைவி பரிமளா தகராறில் ஈடுபட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதில், மனமுடைந்த முரளி, கடந்த 2 நாட்களுக்கு முன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீடு திரும்பினார். இதை தாய் கொண்டம்மாவும், அண்ணன் கிரிபாபுவும் கண்டித்துள்ளனர். மேலும், அவர்களிடம் மது குடிக்க பணம் கேட்டு முரளி தொந்தரவு செய்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததால், முரளி தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். போலீசார் முரளி மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் மொட்டை மாடியில் முரளி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவருக்கு அருகே ஒரு உருட்டுக்கட்டை ரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்தது.

தகவலறிந்து கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் மனோகரன், உதவி கமிஷனர் ராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முரளியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விசாரணையில், மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், முரளியை அவரது அண்ணன் கிரிபாபுவே உருட்டுக்கட்டையால் சரமாரி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து தலைமறைவான கிரிபாபுவை நேற்று காலை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.Tags : Alcohol, money, brother murder, brother arrested
× RELATED தம்பியை கொன்றவரை பழிவாங்க கத்தியுடன்...