கொடுங்கையூர் சிட்கோ நகர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகளால் மாயமான நடைபாதை: பாதையும் குறுகியதால் நெரிசல்

பெரம்பூர்: வடசென்னை பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறமும் பாதசாரிகளின் வசதிக்காக பல கோடி ரூபாய் செலவில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.

தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டிகள், பெட்டிக் கடைகள், துரித உணவகம் உள்ளிட்டவை நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலையோரம் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து தங்களது வாகனங்களை நிறுத்துகின்றனர்.  இவ்வாறு நடைபாதையில் கடை வைத்துள்ளவர்களிடம் ஆளும்கட்சி பிரமுகர்கள் மாதம்தோறும் பணம் வசூலித்து வருவதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். பல இடங்களில் சாலையை ஆக்கிரமித்தும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகள் அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் சிட்கோ நகர் பிரதான் சாலையில் இருபுறமும் உள்ள நடைபாதையில் பாஸ்ட் புட் கடை, பிரியாணி கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை, ஹார்டுவேர் கடை மற்றும் பழக்கடை மெக்கானிக் கடை என பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன.  இதுதவிர, ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால் நடைபாதையில் செல்ல முடியாமல் மக்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். குறிப்பாக, காலை நேரங்களில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துவிட்டன. ஒவ்வொரு கடை முன்பு சுமார் மூன்று அடி முன்னே அவர்களின் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாங்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சங்கிலி போட்டு விட்டு சென்று விடுகின்றனர். நீண்ட நாட்கள் கழித்து வந்து மீண்டும் எடுத்து செல்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் எப்போதும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.  இந்த சாலையில்தான் கொடுங்கையூர் காவல் நிலையமும்  இயங்கி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால் காவல்துறையினரும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களது பகுதிக்கு வந்து நடைபாதைகளை  ஆய்வு செய்து  ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றி பொதுமக்கள்  நடைபாதையை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும்,’ என்றனர்.  

Related Stories: