மது அருந்த இடையூறாக இருந்ததால் சிசிடிவி கேமராவை உடைத்த 4 பேர் கைது

பல்லாவரம்: மது அருந்த இடையூறாக இருந்த சிசிடிவி கேமராவை உடைத்த 4 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அயோத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மெர்சி (34). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின் வெளியே, பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா அமைத்து இருந்தார். இவரது வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில், தினமும் இரவு நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சக்திவேல் (20), அஜித் (22), பூபதி (20), ராஜா (20) ஆகியோர் மது அருந்தி வந்துள்ளனர்.  இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த மெர்சி, அந்த வாலிபர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி இரவு அந்த வாலிபர்கள் 4 பேரும் வழக்கம்போல், அதே இடத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, மெர்சி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கருதிய அவர்கள், அதனை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த மற்றொரு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து மெர்சி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் பதுங்கியிருந்த சக்திவேல், அஜித், பூபதி, ராஜா உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: